Published : 16 Oct 2023 03:44 PM
Last Updated : 16 Oct 2023 03:44 PM
சென்னை: “சுங்கத்துறை வேலைவாய்ப்புக்கான தேர்வில் மோசடி செய்து பிடிபட்டுள்ளவர்களின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். இத்தேர்வை ரத்து செய்ய முன்வர வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள இந்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்துக்கு உணவக உதவியாளர், எழுத்தர், மகிழுந்து ஓட்டுநர், சமையலர் போன்ற பணியிடங்களுக்கு 17 பேரைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு 14.10.2023 அன்று மேற்படி அலுவலகத்தில் நடந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். அப்போது, அத்தேர்வெழுதுவோரைக் கண்காணிப்பாளர்கள் சோதித்தபோது, 30 பேர் காதுகளில் ப்ளு-டூத்துகள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன. அவற்றைச் சோதித்தபோது வெளியிலிருந்து ஒருவர் இங்குள்ள வினாக்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதும் தேர்வர்கள் அதைக் கேட்டு விடை எழுதிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த 30 பேரில் 28 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள், இரண்டு பேர் உத்தரப் பிரதேசக்காரர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய அரசுத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளுக்கான தேர்வுகளில் தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் மிகை எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று வேலைகளில் சேர்க்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்திக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்தும், விடைத்தாள் தில்லுமுல்லுகள் செய்தும் சிக்கிக் கொண்டு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி படைக்கலத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அஞ்சல் துறைக்கான வேலைவாய்ப்பு தேர்வுகள் நடந்தபோது, தமிழ்த்தாளில் மொத்த மதிப்பெண் 25க்கு 25, 24, 23 என்று அரியானாக்காரர்கள் வாங்கியதும், தமிழ்நாட்டுத் தேர்வர்கள் மேற்படித்தாளில் 25க்குப் 17. 16 என்று வாங்கியதும் வெளிப்பட்டு, அத்தேர்வுகளில் நடந்த மோசடிகள் அம்பலமாயின. அத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. இப்படியான மோசடிகள் வாயிலாக, இந்திய அரசின் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி வரித்துறை, கணக்குத் தணிக்கைத் துறை, துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, போன்ற அனைத்துத் துறைகளிலும் 100க்குத் 95 விழுக்காடு வேலைகளை பிற மாநிலத்தவர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.
எனவே, சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்புக்கான தேர்வில் மோசடி செய்து பிடிபட்டுள்ளவர்களின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இத்தேர்வை ரத்து செய்ய முன்வர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் இதுபோன்ற மோசடிகள் நடந்ததா, மோசடியில் ஈடுபட்டு பணியில் சேர்ந்தவர்கள் யார், அதற்கு துணை நின்றவர்கள் யார், அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மதிப்புக்குரிய அரிபரந்தாமன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறை வேலைவாய்ப்புகளில் 100-க்கு 100 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கென்று, அரியானாவை போன்று, தனிச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அதேபோன்று, தமிழ்நாடு நிறுவனங்களின் முறைசாரா வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கும் வகையில், தமிழ்நாடு அமைப்புசாரா வேலை வழங்கும் வாரியம்' அமைக்கும் அவசரச் சட்டத்தையும் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது'' என்று வேல்முருகன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT