

பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் வெளியாட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வாகனத்தை இயக்க அரசு முயற்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின் விவரம்:
போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 16 மாதங்களாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களுடன் அரசு 21
சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் நிர்வாகத்துடன் உடன்பாடு ஏற்படாத நிலையிலே தொழிலாளர்கள் நீண்ட காலமாக அவர்கள் மீது தொடுக்கப்பட்ட அடக்குமுறை வேகம் அனைத்தும் கொப்பளிக்கும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுபட்டு அரசை எதிர்த்து வெற்றிகரமாக போராடி வருவதை இந்தக் கூட்டமைப்பு பாராட்டுவதோடு, இதே நிலையில் தொடர்ந்து அமைதியான முறையில் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர வேண்டுமென கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தொழிலாளர்களது பிரச்சினை சம்மந்தமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அரசிடம் கோரிக்கை வைத்து நேரிடையாகப் பேசியும், ஜனநாயகப்பூர்வமாக பல்வேறு
இயக்கங்களை நடத்தியும் பிரச்சினைகள் தீராத நிலையில் கடந்த 2017 மே 15, 16 ஆகிய தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை
நிறுத்தத்தையொட்டி மூன்று அமைச்சர்கள் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு செலவு செய்யப்பட்ட
பணம் மூன்று மாத காலத்தில் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி தொழிலாளர்கள் பணத்தை செலவு செய்ய மாட்டோம், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்படும், மற்ற பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
ஆனால், 6 மாத காலம் ஆகியும் அமைச்சர்கள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மிகக் கடினமான பணியைச் செய்யும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மிகக்
குறைவான ஊதியம் வழங்கப்படுகின்றது. ஊதியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யக் கோரியும், அரசு தொழிலாளர்களது நியாயமான கோரிக்கையை மறுத்துள்ளது.
அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்களுக்கு போராடுவதைத் தவிர வேறுவழியில்லை.
4.1.2018 அன்று காலை 11 மணி முதல் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஊதியம் சம்மந்தமாக பேசிக் கொண்டு இருக்கும்போதே மறைமுகமாக ஒப்பந்தத்தை தயார் செய்து தொழிலாளர் துறை அதிகாரிகளையும் அழைத்து பெரும் பகுதி தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்களைப் புறக்கணித்து, சில சங்கங்களை பயன்படுத்தி ஒப்பந்தம் உருவாக்க அரசு முயற்சி செய்தது. இது முற்றிலும் தவறானது என்பதுடன் சட்டத்திற்கும் புறம்பானதாகும்.
முழுமையான தொழிலாளர் விரோத நடவடிக்கையும் ஆகும். கூட்டமைப்புச் சங்கங்கள் பேச்சுவார்த்தையில் இருந்தவரை ஊதிய நிலுவைத் தொகை (அரியர்ஸ்) பற்றி மறுக்கப்படவில்லை. கூட்டமைப்புச் சங்கங்கள் உடன்பாடு ஏற்படாத பின்பு வெளியேறிய பிறகு 1.9.2016 முதல் 31.8.2017 (1 ஆண்டு) வரை அரியர்ஸ் இல்லை என முடிவு
செய்யப்பட்டுள்ளது. மேலும் பேச்சுவார்த்தையில் பேசியதற்கு மாறாக ஊதிய விகிதம் மாற்றப்பட்டது. குறைந்தபட்ச உயர்வு, அதிகபட்ச உயர்வு என அறிவித்துள்ளதும் தவறான கணக்காகும். குளறுபடியான முறையிலேயே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதிப்பு களையும் சரி செய்து நியாயமான ஒப்பந்தம் உருவாக்க வேண்டும் என அரசை இக்கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
அமைச்சருக்குக் கண்டனம்
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 99 சதவிகித அளவில் போராட்டத்தில் இறங்கி தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்காமல், போராடுகின்ற தொழிலாளர்களை கொச்சைப்படுத்துகின்ற வகையில் போராட்டம் நியாயமற்றது என்று கூறுவதும், போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பதும் பொதுமக்கள் நலன் பற்றியோ இல்லை வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசப் போவதில்லை என்று அறிவித்திருப்பதற்கு கூட்டுக் குழு தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பொதுமக்கள், தொழிலாளர் நலனுக்கு சுமுக உடன்பாடு உருவாக்க கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
சட்டவிரோத ஒப்பந்தம்: தொழிலாளர் துறைக்கு கண்டனம்
தொழிலாளர் மற்றும் நிர்வாகத்திற்குமிடையே ஏற்படும் தொழிற்தகராறு, தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2-ன் படி சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அதற்குரிய கடிதங்களை பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, பிரச்சினைகளின் கருத்துக்களை இருதரப்பினரிடமும் கேட்டபின், பெருவாரியான உறுப்பினர்களை கொண்ட சங்கத்தின் உறுப்பினர்களை ஆய்வு செய்து அதன் பின் ஒப்பந்தம் செய்திட வேண்டும்.
எனவே, எந்தவொரு சட்ட விதிகளை பின்பற்றாமல், பதிவு செய்யப்படாத சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள தொழிலாளர் துறை வன்மையாக இக்கூட்டம் கண்டிக்கிறது. இதன் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை நாம் தொடர ஆவன செய்திட வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் இதர பகுதி தொழிலாளர்களுக்கு வேண்டுகோள்:
தொழிலாளர்களின் நியாயமான உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காவல்துறையைக் கொண்டு அடக்குமுறை நடவடிக்கையில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் வெளியாட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வாகனத்தை இயக்க அரசு முயற்சிக்கிறது.
அரசின் இதுபோன்ற நடவடிக்கைக்கு இதர பகுதி ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போன்ற தொழிலாளர்கள் ஆதரவு தர வேண்டாம் என இக்கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு மட்டுமின்றி போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு முறையான நிதி ஒதுக்கி சிறப்பான பயணத்தை மக்களுக்கு அளிக்க
வேண்டும் என்பதும் தொழிற்சங்கங்களின் முக்கியமான கோரிக்கையாகும்.
எனவே, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.