

சென்னை: சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.
லாட்டரி விற்பனை மூலம் முறைகேடாக வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் 2019-ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்திருப்பதையும் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஏற்கெனவே முடக்கியது. இந்நிலையில், சென்னை, கோவையில் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 12-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அந்தவகையில், சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனின் அடுக்குமாடி குடியிருப்பு, திருவல்லிக்கேணியில் உள்ள ஆதவ் அர்ஜூனுக்கு சொந்தமான நிறுவனம், ஆயிரம் விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் மார்டின் தொடர்புடைய இடத்திலும் 4-வது நாளாக நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, 4 நாட்களாக நடைபெற்று வரும் சோதனையில், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் உட்பட பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து முழு விவரங்களை தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கோவையிலும் மார்ட்டின் வீட்டில் 4-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றும் சோதனை நடத்தினர்.