

சென்னை: தமிழர் என்ற உணர்வு இருக்கும் வரை தமிழை யாராலும் அழித்துவிட முடியாது என அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழியக்கத்தின் 6-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை சைதாப்பேட்டை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழியக்க நிறுவனர் - தலைவரும், விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் துரைமுருகன், திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம், உலக திருக்குறள் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் மறைமலை இலக்குவனார், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் வா.மு.சேதுராமன், விஜிபி உலக தமிழ் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.சந்தோசம், நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோ.விஸ்வநாதன் பேசியதாவது:
மத்திய அரசை பொறுத்தவரை அனைத்தையும் இந்தியிலே கொண்டு வர வேண்டும் என விரும்புகிறார்கள். உலகிலேயே அதிகமான ‘ரெமிட்டன்ஸ் (வெளிநாடுகளில் சம்பாதித்து இந்தியாவுக்கு பணம் அனுப்புதல்)’ வருகிற நாடு இந்தியா தான். கடந்த ஆண்டு ஒன்பரை லட்சம் கோடி ரூபாய் ரெமிட்டன்ஸ் வந்துள்ளது. அவரவர் தாய்மொழியுடன் உலகளாவிய தொடர்பு மொழியில் புலமை இருந்ததால்தான், இந்தளவு ரெமிட்டன்ஸ் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. மொழி பிரச்சினையை பொறுத்தவரை இந்தியாவில் நிதானம் தேவை. 2023-ல் இந்தியாவில் தனி நபர் வருமானம் 2,600 டாலர். மொத்த உற்பத்தில் 5-வது இடத்தில் இருக்கும் இந்தியா, தனிநபர் வருமானத்தில், 140-வது இடத்தில் இருக்கிறது.
2000-ம் ஆண்டில் இந்தியாவில் பெருங்கோடீஸ்வரர்கள் 9 பேர் தான் இருந்தார்கள். 2022-ம் ஆண்டு இது 166 பேராக உயர்ந்துள்ளது. கோடீஸ்வரர்கள் வளர்ச்சியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் 23 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள்.
எனவே, வசதியானவர்களிடம் வரிவசூல் செய்து, ஏழைகளுக்கு செலவு செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும். அப்போது தான் ஏழை மக்களும் இந்நாட்டில் உயர முடியும். அனைவருக்கும் உயர் கல்வியை கொடுக்க வேண்டும். உயர் கல்வி கொடுப்பதில் தமிழகம் முதலிடத்துக்கு வர வேண்டும். உயர் கல்வி கொடுத்துவிட்டால், பொருளாதாரத்தில் உயர்ந்து வந்துவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘நாம் எல்லோரும் தமிழர்கள், நம் மொழி தமிழ் என்ற உணர்வு உள்ளத்தில் இருக்கும்போது, தமிழை யாராலும் அழித்துவிட முடியாது. உலகில் அழிந்து போன மொழிகள் எல்லாம், பாரம்பரிய மொழி என இருக்கும் போது, வாழும் மொழியான தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து இல்லை என கேட்டவர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை. அதன்பிறகு கேட்டவர் கருணாநிதி. கேட்டது மட்டுமில்லாமல், செம்மொழி அந்தஸ்தை பெற்றும் கொடுத்திருக்கிறார்,’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.பொன்னையன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ கருப்பையா, தமிழியக்கத்தின் பொதுச் செயலாளர் அப்துல்காதர், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், நாஞ்சில் சம்பத், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.