

ராமேசுவரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாள் நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாம் தேசியநினைவகம் முழுவதும் வண்ணவிளக்குகளாலும், கலாம் அடக்கம்செய்யப்பட்ட இடம் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
நினைவிடத்தில் கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள்நசிமா மரைக்காயர், பேரன்கள்ஷேக் சலீம், ஆவுல் மீரா, மருமகன் நிஜாம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.
அரசு சார்பில் இஸ்ரோ தலைவர்எஸ்.சோம்நாத் தலைமையிலான அதிகாரிகள், கலாம் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். நவாஸ்கனி எம்.பி., முருகேசன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, நகராட்சித் தலைவர் நாசர்கான், நடிகர் தாமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மாணவர்கள்,சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, நினைவகத்தைப் பார்வையிட்டனர்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில்...:கலாம் மறைவுக்குப் பின்னர் இலங்கை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அப்துல் கலாமின் மார்பளவு சிலை இந்திய தூதரகம் சார்பில் நிறுவப்பட்டது. இதுவே, இந்தியாவுக்கு வெளியே கலாமுக்கு முதல்முறையாக நிறுவப்பட்ட சிலையாகும். கலாம் பிறந்த நாளையொட்டி யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள அவரது சிலைக்கு இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூதரக ஊழியர்கள், நூலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.