நாமக்கல் அருகே தொடரும் அசம்பாவிதம்: 2,200 வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள கொந்தளம் கிராமத்தில்  மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட வாழை மரங்கள்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள கொந்தளம் கிராமத்தில் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட வாழை மரங்கள்.
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் அருகே 2,000 வாழை மற்றும் 200 பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டத்துக்கு உட்பட்ட கொந்தளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம். இவர் 2ஏக்கர் நிலத்தில் 1,750 வாழை மரங்களை நடவு செய்து, பராமரித்து வந்தார். இவை 6 மாதம் வளர்ந்த நிலையில் இருந்தன.

இந்நிலையில், நேற்று இந்த வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 250 வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

இது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், நாமக்கல் எஸ்.பி. ச.ராஜேஷ்கண்ணன் மற்றும் திருச்செங்கோடு கோட்டாட்சியர் சுகந்தி தலைமையிலான அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தினர். அசம்பாவிதத்தைத் தவிர்க்க, கொந்தளம் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காரணம் என்ன?: கடந்த மார்ச் 11-ம் தேதி கரப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு தீ வைத்தல், விவசாயத் தோட்டத்தில் வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்ப்பது, வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்புகள் மீது பெட்ரோல் குண்டு வீசுதல், பள்ளி வாகனங்களை எரித்தல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் வாழைமற்றும் பாக்கு மரங்கள் வெட்டிசாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in