கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: தமிழக பேருந்து, லாரி எல்லையில் நிறுத்தம்

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலி: தமிழக பேருந்து, லாரி எல்லையில் நிறுத்தம்
Updated on
1 min read

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்ல வேண்டிய 300-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மகதாயி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகா முழுவதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால் நேற்று அதிகாலை முதலே தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு நகருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன. அதேபோல ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடகா எல்லைப்பகுதியான அத்திப்பள்ளிக்கு தினமும் இயக்கப்படும் 20 தமிழக அரசு நகர பேருந்துகளும், தமிழக எல்லைப்பகுதியான ஜூஜூவாடி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

மேலும், ஓசூர் - பெங்களூரு இடையே வழக்கமாக இயக்கப்படும் 70 கர்நாடக அரசுப் பேருந்துகளும் நேற்று இயக்கப்படவில்லை. ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள் அனைத்தும் ஓசூர் உள்வட்ட சாலையின் இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘கர்நாடக மாநிலத்துக்கு ஓசூர் வழியாக 300-க்கும் மேற்பட்ட தமிழக அரசுப் பேருந்துகளும், அத்திப்பள்ளி வரை 20 நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அனைத்தும் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு 12 மணிக்குப் பிறகு ஓசூரில் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான பயணிகள் தனியார் பேருந்துகளை நாடிச் சென்றதால், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

இதேபோல், சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களுரு, கொள்ளேகால் நகரங்களுக்குச் செல்லும் தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கர்நாடகாவில் இருந்து தமிழக நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

சாம்ராஜ் நகரில் இருந்து தாளவாடிக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். கனரக வாகனங்கள் மிகக்குறைந்த அளவே இயக்கப்பட்டன. சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு தலமலை வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டன.

தமிழக எல்லையான பண்ணாரி, கர்நாடக மாநில எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடிகள் வெறிச்சோடின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in