Published : 16 Oct 2023 04:04 AM
Last Updated : 16 Oct 2023 04:04 AM
தருமபுரி: பென்னாகரம் அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடர்பான பிரச்சினையில் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர் கிராமத்தில் மலை உச்சியில் பழமை வாய்ந்த கோபால்சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் திருவிழா நடைபெறும். மேலும் நவராத்திரியின் போது சுவாமி திருக் கல்யாணம் நடைபெறும்.
திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், கோயில் பொதுப்பணத்தை நிர்வாகிகள் சிலர் கையாடல் செய்து மோசடி செய்த தாகக் கூறி ஒரு தரப்பு பொது மக்கள் கடந்த ஜனவரி மாதம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். கோயில் பொதுப் பணத்தை நிர்வாகிகள் பேரில் வங்கியில் கூட்டாக கணக்கு தொடங்கி வரவு செலவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், கிராம மக்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கோட்டாட்சியர் உத்தரவை மீறி ஒரு தரப்பினர் தன்னிச்சையாக திருவிழா நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலையூர் கிராம மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் உத்தரவை அமல்படுத்தக் கோரியும், கோயில் திருவிழாவை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விட்டு மலை உச்சியில் உள்ள கோபால்சாமி கோயில் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பாப்பாரப் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் கோயில் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். தகவலறிந்து வந்த பென்னாகரம் வட்டாட்சியர் (பொறுப்பு) அன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிடும் வரை திருவிழா நடத்த அனுமதிக்கப்படாது என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT