Published : 16 Oct 2023 06:06 AM
Last Updated : 16 Oct 2023 06:06 AM

சென்னை கோயில்களில் நவராத்திரி தொடக்கம்: பெசன்ட் நகரில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்

நவராத்திரியையொட்டி, சென்னை ராஜ் பவனில் அமைக்கப்பட்டுள்ள கொலுவை ஆளுநரின் மனைவி லஷ்மி ரவி குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார். உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை: சென்னை கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கிஉள்ளது. பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிற சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகிற நிகழ்வாக நவராத்திரி விழாகொண்டாடப்படுகிறது. துர்கா தேவி, லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று தேவிகளும் சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை வதம் செய்ததே நவராத்திரி ஆகும்.

9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவை மூன்று, மூன்றுநாட்களாக பிரித்து 3 தேவிகளுக்கும் விழா நடத்தப்படுகிறது. அந்தவகையில், சென்னையில் உள்ள பல கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. அக்.15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழாவையொட்டி, கோயில்களில் கொலு வைத்து, காலை மற்றும் மாலையில் சிறப்புவழிபாடு நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் கொலுவுடன் நவராத்திரி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

மேலும், வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரியையொட்டி சக்தி கொலு பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தினசரி இரு வேளைகளில் அம்மன் கொலு சந்நிதியில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. அத்துடன் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடக்கவுள்ளது.

வடபழனி முருகன் கோயிலில் கொலு பார்வை நேரம் காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரையும், மாலை 4.30 மணி முதல்இரவு 9 மணி வரையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், வடிவுடையம்மன் கோயில், காளிகாம்பாள் கோயில், முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா நேற்று தொடங்கி உள்ளது.

நவராத்திரி விழா தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் நேற்று கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தனர். நவராத்திரியை யொட்டி, பெசன்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x