

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து உரிமையாளர்கள் சுமார் 12 லட்சம் பேர் உள்ளனர். சொத்து வரியாக இவர்களிடம் இருந்து ஆண்டுதோறும் ரூ.1,700 கோடியை மாநகராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது.
இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் ரூ.769 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.31-ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அரையாண்டில் மொத்தம் ரூ.850 கோடி சொத்து வரிவசூலிக்க வேண்டியுள்ள நிலையில், சலுகை அறிவித்து, அக்.31-ம்தேதிக்குள் ரூ.500 கோடி வசூலிக்கமாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துஉரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30 வரையிலும், 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்.30-ம் தேதிக்கு முன்பாகவும், 2-ம் அரையாண்டு சொத்துவரியை அக்.30-ம் தேதிக்கு முன்பாகவும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீத ஊக்கத் தொகையாக அதிகபட்சம் ரூ.5ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் சொத்துஉரிமையாளர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் நினைவூட்டல் மற்றும் பணம் செலுத்துவதற்கான இணையதள இணைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. வரி வசூலிப்பாளர்களிடம் உள்ள பிஓஎஸ் கையடக்க கருவி உதவியுடன், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக சொத்துவரி செலுத்தலாம். மண்டலம் அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாக பணமாக செலுத்தலாம்.
‘நம்ம சென்னை’, பேடிஎம் செயலிகள், மாநகராட்சி இணையதளம் (www.chennaicorporation.gov.in), சொத்துவரி சீட்டில் இடம்பெற்றுள்ள கியூஆர் கோடு மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம். அக்.31-ம்தேதிக்குள் ரூ.500 கோடி சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதற்கு முன்பு வரை, சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அக்.31-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த தவறினால், அபராதமாக மாதத்துக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும்.
தவிர, இதற்குமுன்பு, எந்த சொத்துக்கு வரி கட்டவில்லையோ, அந்த சொத்தை மட்டும்தான் ஜப்தி செய்ய முடியும். புதிய சட்ட விதிகளின்படி, இனி, சொத்து உரிமையாளரின் எந்த சொத்தை வேண்டுமானாலும் ஜப்தி செய்ய முடியும். நீண்ட காலமாக சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின் சொத்துகள் விரைவில் ஜப்தி செய்யப்பட உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.