

கானாத்தூர்: தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹெச்.சி.எல். நிறுவனம் மற்றும் இந்திய சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் ‘சைக்ளத்தான்’ எனும் சைக்கிள் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி அருகே கானாத்தூர் ரெட்டிக்குப்பத்தில் நேற்று நடைபெற்றது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் இதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தபோட்டி 55 கிமீ, 23 கிமீ மற்றும் 15 கிமீஎன மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, குஜராத், அசாம்,கர்நாடகா, ஒடிசா, உத்தராகண்ட், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 956 ஆண்கள், 169பெண்கள் பங்கேற்றனர். காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 300-க்கும்மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முடிவில் 3 பிரிவுகளில் நடை பெற்ற போட்டியில் 55 கி.மீ. சென்று முதலிடம் பிடித்த வீரர்களுக்கு தலா 1 லட்சத்து 25 ஆயிரம், 23 கி.மீ. தூரம்சென்று முதலிடம் பிடித்தவருக்கு ஒரு லட்சம், 15 கி.மீ. தூரம் சென்று முதலிடம் பிடித்தவருக்கு 75 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல்தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்ஜெ.மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஹெச்.சி.எல். நிறுவனத் தலைவர் சுந்தர் மகாலிங்கம், ஆசிய சைக்கிள்ஓட்டுதல் கூட்டமைப்புத் தலைவர் ஓன்கர்சிங், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிக்காக கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் இருந்து மாமல்லபுரம் வரை போக்குவரத்துக்கு தடை விதித்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.