

சென்னை: சென்னை மெரினா, பெசன்ட்நகர் மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியில் மாநகராட்சி மேயர் பங்கேற்றார். உலக சேவை தினத்தையொட்டி, சர்வதேச அரிமா சங்கம் சார்பில் பொது இடங்களில் தூய்மை பேணுதல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மெரினா, பெசன்ட்நகர் மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் 6,500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரிமா சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் உலக சாதனை ஒன்றியத்தின் சார்பில் சர்வதேச அரிமா சங்கத்துக்கு, விழிப்புணர்வு பேரணியில் அதிக மக்கள் பங்கேற்றதற்கான சாதனை சான்றிதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது: இது உலகிலேயே பெரிய அளவிலான கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வாகும். இதன்மூலம் சர்வதேச அரிமா சங்கம் உலக சாதனை படைத்துள்ளது. சுத்தம் செய்யும் பணியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் சிறப்பாக பணியில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு பருவமழை நேற்று (அக்.14) முதல் தொடங்கியுள்ளது. சென்னையில் அதிகபடியான மழை பதிவாகியுள்ளது. கொளத்தூர், திரு.வி.க.நகர், உத்தண்டி, மணலிபோன்ற பகுதிகளில் 4 செ.மீ.வரையில் மழை பதிவானது. மற்றஇடங்களில் குறைவுதான். சென்னையில் தற்போது மழைநீர்வடிகால் பணிகள் ஓரளவுக்கு அனைத்துஇடங்களிலும் முடிக்கப்பட்டுவிட்டன. சில இடங்களில் மட்டும் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். இதனால்தண்ணீர் தேங்குவது தடுக்கப்படும். அதேபோல, அனைத்து சுரங்கப்பாதைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரைஎந்த இடத்திலும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதாக தகவல் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், த.வேலு எம்எல்ஏ, சர்வதேச அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ராஜேஷ் என்.தேவானந்த், துணைநிலை ஆளுநர் முருகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் கீதா முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.