Published : 16 Oct 2023 06:09 AM
Last Updated : 16 Oct 2023 06:09 AM
சென்னை: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மீன்வள பூங்காவாக அறிவிக்க வேண்டும் என மத்திய மீன்வள துறை அமைச்சரிடம், மீனவர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்கம், இந்திய மீன்வள தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் நிர்வாகிகள் நாஞ்சில்பி.ரவி, ஏ.மரியதாஸ் உள்ளிட்டோர் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் புருஷோத்தமன் ரூபலா, இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்து அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை தரம் உயர்த்தி, விரிவுபடுத்தி உலக தரம் வாய்ந்த மீன்பிடித் துறைமுகமாக மாற்ற வேண்டும். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மீன்வள பூங்காவாக அறிவிக்க வேண்டும்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதியை செயல்படுத்தவிடாமல் தடை செய்ததால்காசிமேடு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே மத்திய அரசுபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதித்துறை, சட்டத் துறை, மருத்துவத் துறைகளில் மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட மீனவ சமூகத்தை மீனவ பழங்குடி பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக் காலத்தை அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அமல்படுத்த வேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்த மீனவர்களுக்கு உறுதியான பெரிய படகுகளை கட்டவும், தரமான வலைகளை பயன்படுத்தவும் ரூ.1.50 கோடியும், நாட்டு படகு கட்ட ரூ.50 லட்சமும் தேவைப்படும். இதில், மத்திய அரசு 90 சதவீதம் மானியமும், வங்கி கடனாக 5 சதவீதமும், மீனவர்களின் பங்களிப்பாக 5 சதவீதம் பங்களிப்புடன் மத்திய அரசு உதவ வேண்டும்.
மீனவர்களுக்கு என்று மீன்வள வங்கி தொடங்கி ஆண்டுக்கு 4% வட்டியில் வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை பேரிடர் மற்றும் விபத்தில் மீனவர் இறந்தால் தலா ரூ.20 லட்சமும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
தமிழகம் மற்றும்புதுச்சேரி உள்ளிட்ட 14 கடலோர மாவட்டங்களில் சுமார் 610-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. ஆனால், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமண்டல வரைபடத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்கள் விடுபட்டுள்ளன. எனவே, அதையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT