சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? - புதுச்சேரியில் தொடரும் குழப்பம்

சந்திர பிரியங்கா | கோப்புப் படம்
சந்திர பிரியங்கா | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமாவா? அல்லது நீக்கமா? என்பது தொடர்பாக பதில் சொல்ல முதல்வர் ரங்கசாமி மீண்டும் மறுத்துவிட்டார். இதனால் அமைச்சரவையில் தொடர் குழப்பம் நீடிக்கிறது.

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த அக்டோபர் 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் மாளிகை, முதல்வர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தார்.

இது பற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு கோபத்துடன் பதில் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் துணை நிலை ஆளுநர் தமிழிசை சென்னையில் அளித்த பேட்டியில், “அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் முதல்வர் இம்முடிவு எடுத்தார்” என்று தெரிவித்திருந்தார்.

பேரவைத் தலைவர் செல்வமும், “நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார். இதற்கிடையில் அமைச்சர் லட் சுமி நாராயணன், “அமைச்சரை நியமிக்கவும், மாற்றவும் முழு அதிகாரம் முதல்வருக்கு உண்டு. அவர்காரணம் சொல்ல வேண்டிய தில்லை” என்று தெரிவித்தார்.

அக். 9-ம் தேதி ராஜினாமா கடிதத்தை அமைச்சர் சந்திர பிரியங்கா அளிப்பதற்கு முன்பாகவே அவரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் ரங்கசாமி ஆளுநரிடம் கடிதம் தந்துள்ளார். கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகியும் அமைச்சரை நீக்கி துணைநிலை ஆளுநர் அரசாணை வெளியிடாமல் உள்ளார்.

இந்நிலையில் நேற்று அப்துல் கலாம் அறிவியல் மையத்துக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது மீண்டும் அவரிடம் அமைச்சர் ராஜினாமா தொடர்பாக கேட்டதற்கு, “கலாம் பிறந்தநாள் என்பதால் வந்தேன்” என்று கூறி பதில் தர மறுத்துவிட்டார். துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒரு வாரமாக புதுச்சேரிக்கு வரவில்லை.

இச்சூழலில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் சந்திர பிரியங்கா பெயரே இன்னும் தொடர்கிறது. அவர் தங்கியுள்ள அரசு வீடும், கார்களும் இன்னும் ஒப்படைக்கப் படவில்லை. அவ்வீட்டில் போலீஸாரின் பாதுகாப்பும் தொடர்கிறது. புதுச்சேரி அமைச்சரவை செயல்பாட்டில் தொடர்ந்து குழப்பமே நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in