Published : 19 Jan 2018 11:17 AM
Last Updated : 19 Jan 2018 11:17 AM

கிணற்றில் தவறி விழுந்த குட்டியை கூட்டத்தில் சேர்க்க மறுக்கும் யானைகள்: மீண்டும் கிராமத்திற்கு திரும்பியது

ராயக்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை மீட்டு வனத் துறையினர் வனப் பகுதிக்குள் விட்டனர். கூட்டத்தில் சேர்க்க யானை கள் மறுப்பதால், குட்டி யானை மீண்டும் கிராமத்துக்கு திரும்பி வந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே திம்ஜேப்பள்ளி ஊராட்சி பாவாடரப்பட்டி கிராமம் அருகே கடந்த 16-ம் தேதி யானைகள் சென்ற போது, 3 மாத பெண் குட்டி யானை வறண்ட கிணற்றில் தவறி விழுந்தது. குட்டி யானையை வனத் துறையினர் மீட்டு ஊடேதுர்க்கம் காட்டில் விட்டனர். நேற்று முன்தினம் அந்த குட்டி யானை உள்ளுகுறுக்கை கிராமத்துக்குள் வந்தது. குட்டி யானைக்கு பால், பழம் கொடுத்த வனத் துறையினர் மீண்டும் வனப் பகுதிக்குள் விட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை மீண்டும் அந்த குட்டி யானை யு.கொத்தப்பள்ளி, யு.புரம் ஆகிய கிராமங்களுக்குள் வந்தது. குடியிருப்பு பகுதியில் சுற்றிய குட்டி யானையைக் கண்டு கிராம மக்கள் பால், பழம் ஆகியவற் றை கொடுத்தனர். தகவலறிந்த ராயக்கோட்டை வனச் சரகர் பாபு, வனத் துறையினர் குட்டி யானையை வனத் துறை அலுவலகம் கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக வனத் துறையினர் கூறும்போது, ‘‘மனித வாடை பட்டதால் இந்த குட்டியை கூட்டத்தில் சேர்க்க அதன் தாயும் மற்ற யானைகளும் மறுக்கின்றன. குட்டி யானையை அதன் தாய் மற்றும் பிற யானைகள் சேர்ந்து துதிக்கையால் தாக்கி விரட்டியுள்ளன. இதன் காரணமாகவே அந்தக் குட்டி மீண்டும் வந்துள்ளது. தற்போது இந்த குட்டியை அதன் தாயுடன் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குட்டியானை பிளிரும் சத்தம் கேட்டு, அதன் தாய் மற்றும் பிற யானைகள் இரவு நேரத்தில் வந்து அழைத்துச் செல்லும்,’’ என்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘‘குட்டி யானை மீண்டும் மீண்டும் கிராமத்துக்குள் வருகிறது. நாய்கள் துரத்துகின்றன. அவை கடித்து விட வாய்ப்புள்ளது. குட்டி யானையை யானைகள் சரணாலயத்தில் விட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x