Published : 15 Oct 2023 04:31 PM
Last Updated : 15 Oct 2023 04:31 PM

சுங்கத்துறை பணிக்கான போட்டித் தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது: விசாரணை கோரும் ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா, என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கடைநிலைப் பணிகளுக்கு 17 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற போட்டித் தேர்வில், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தி வெளியிலிருந்து விடைகளை கேட்டு எழுதியதாக 29 பேரும், ஆள் மாறாட்டம் செய்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் 26 பேர் ஹரியானாவையும், தலா இருவர் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அஞ்சல்துறை பணிக்கான தமிழ்மொழி போட்டித் தேர்வில் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறாத நிலையில், அனைத்து இடங்களுக்கும் தமிழே தெரியாத ஹரியானா மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வட இந்தியர்கள் மோசடியின் மூலமாகவே வெற்றி பெறுகிறார்களா? என்ற ஐயம் எழுந்திருந்தது. இதை நானும் கடந்த காலங்களில் பலமுறை குறிப்பிட்டிருந்தேன். இப்போது மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த ஐயம் வலுவடைந்திருந்தது.

அரசுப் பணிகள், குறிப்பாக மத்திய அரசு பணிகள், குதிரைக் கொம்பாக மாறி வரும் நிலையில், அந்த பணிகளில் தகுதியானவர்களும், திறமையானவர்களும், உள்ளூர் மக்களும் அமர்த்தப்படுவதற்கு பதிலாக, பணியிடங்களுடன் சிறிதும் தொடர்பில்லாத சிலர் மோசடியான வழிகளில் அந்த வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வது மிகப்பெரிய குற்றம் ஆகும். தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவர்களால் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த மோசடியின் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளுக்காக கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளில், அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 விழுக்காடும், கடைநிலைப் பணிகளில் 100% பணிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x