Last Updated : 15 Oct, 2023 03:17 PM

 

Published : 15 Oct 2023 03:17 PM
Last Updated : 15 Oct 2023 03:17 PM

இஸ்ரேலில் இருந்து மதுரை வந்த ஆராய்ச்சி மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு 

இஸ்ரேலில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த மாணவிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

மதுரை: போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிகளை அவரவர் சொந்த ஊர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிவைத்தது.

இஸ்ரேல் நாட்டில் நடக்கும் போர் காரணமாக ‘ஆப்ரேஷன் அஜய்’ மூலமாக இந்தியா திரும்பியவர்களில் 22 தமிழர்கள் டெல்லியில் இருந்து தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பர்லான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் 8 பேர் தனி விமானம் மூலம் டெல்லி வந்தபிறகு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் அவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் துணை ஆணையர் பிரதீப் வரவேற்றனர். மதுரை வந்த 8 பேரில், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த 4 பேரும், திருச்சியைச் சேர்ந்த இருவர், அரியலூர் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 8 பேரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

மதுரை வந்த ஆராய்ச்சி மாணவி பகவதி செய்தியாளர்களிடம் கூறியது: "இஸ்ரேல் தலைநகர் டெல் அலிவ் உள்ள பெர்லான் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அங்கு போர் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்திய மாணவர்கள் தற்காலிகமாக இந்தியா திரும்பியுள்ளோம். சூழல் சரியான பிறகு மீண்டும் அங்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்வோம். நாங்கள் தங்கியிருந்த இடம் பாதுகாப்பான பகுதி தான். எல்லாருமே ஆராய்ச்சி மாணவர்கள் எங்களின் பெற்றோர் பதற்றம் அடைந்ததே இந்தியா திரும்பியதற்கான முக்கிய காரணம்.

மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து எங்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்தனர். இஸ்ரேல் -இந்தியா உறவு சிறப்பாக உள்ளது. போர் பதற்றம் முடிந்த பிறகு நிச்சயம் மீண்டும் என்னுடைய ஆராய்ச்சியை அங்கு மேற்கொள்வேன். இஸ்ரேல் அரசும் எங்கள் செயல்பாடு குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தது.

எல்லையிலுள்ள தமிழர்கள் பதற்றமாக இருந்தாலும், மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இஸ்ரேலில் படிக்கும் இந்திய மாணவர்கள் ஆயிரம் பேர் ஒரே வாட்ஸ் -ஆப் குரூப்பில் இந்தியன் எம்பஸியுடன் தொடர்பில் உள்ளோம். எந்தக் குறையும் இல்லை" என்றார்.

மற்றொரு ஆராய்ச்சி மாணவி ஏஞ்சல் கூறுகையில், "போர் பதற்றம் காரணமாக அங்குள்ள மாணவர்களுக்கு சற்று மன அழுத்தம் அதிகமாக இருந்தது. பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்களுக்காக அவசர கால பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்தனர் துப்பாக்கி சூடு சத்தங்களை கேட்கும் போது பதற்றம் இருந்தது. மூளை சம்பந்தமான ஆராய்ச்சி யில் ஈடுபட்டுள்ளதால் வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் மூலமாக பணிபுரிய ஏற்பாடு செய்து கொடுத் துள்ளனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x