முதுமலை | வளர்ப்பு யானை மூர்த்தி உயிரிழப்பு: ஆட்கொல்லியாக இருந்து சாதுவாக மாறியதை நினைவுகூர்ந்த வனத்துறையினர்
முதுமலை: தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த மூர்த்தி என்ற மக்னா யானை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்போது, 28 வளர்ப்பு யானைகளைப் பராமரித்து வருகின்றனர். இதில் மக்னா யானை மூர்த்தியும் ஒன்று.மூர்த்தி என்ற மக்னா யானை தெப்பக்காடு யானை முகாமில் 1998 முதல் பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த யானை தனது 58 வயதை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் அதற்கு கடந்த ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்டது.
ஆட்கொல்லி யானையாக கேரளாவில் 1998-ம் ஆண்டுக்கு முன்பு இருந்திருக்கிறது. கேரளாவில் சுமார் 23 நபர்களை இந்த மக்னா தாக்கி கொன்று இருக்கிறது.கேரளா முதன்மை வனப்பாதுகாவலர், அந்த யானையை சுட்டுப் பிடிப்பதற்கு ஆணையிட்டு இருந்தார்.
ஆனால் அந்த யானை அன்றைய தினத்தில் தமிழகப் பகுதியான, கூடலூர் வனக்கோட்டத்துக்குள் நுழைந்து இரண்டு நபர்களை கொன்றுவிட்டது. தமிழ்நாடு முதன்மை வனப்பாதுகாவலர், அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு ஆணையிட்டார். அதன் அடிப்படையில் அப்போது தெப்பக்காடு யானை முகாமில் பணிபுரிந்து வந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்ற கால்நடை மருத்துவர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி 12.7.1998 அன்று வாச்சிகொலி என்ற இடத்தில் பிடித்தார்.
பிடிபட்டபோது அந்த யானையின் உடம்பு முழுவதும் அதிக காயங்கள் இருந்தன. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அந்த யானையின் அனைத்து காயங்களுக்கும் முறையாக மருத்துவம் செய்து யானையை குணப்படுத்தினார். அவர் அந்த யானையை பிடித்து குணப்படுத்தியதன் அடிப்படையில் அந்த யானைக்கு மூர்த்தி என்றும் பெயரிடப்பட்டது. மூர்க்கத் தனமாக இருந்த அந்த யானை முதுமலை யானை முகாமுக்கு வந்து பழக்கப்படுத்திய பின்பு சாதுவாக மாறியது.
முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது: உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தது. சனிக்கிழமை, உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு, தரையில் படுத்துவிட்டது. கால்நடை டாக்டர்கள் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 9:15 மணிக்கு வளர்ப்பு யானை மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மூர்த்தி யானையின், மறைவு வனத்துறையிரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறும்போது, ‘மூர்த்தி மாதிரி ஒரு சாதுவான யானை இந்த முகாம் பார்த்து இருந்திருக்காது. அந்த அளவுக்கு மிகவும் சாதுவாக ஆனது. பல வகையான பணிகளுக்கு அந்த யானை ஒத்துழைத்தது. கடந்த ஓராண்டாக வயது முதிர்வின் காரணமாக அந்த யானையின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. முதுமலை கால்நடை மருத்துவர் அந்த யானைக்கு போதிய சிகிச்சை அளித்து வந்தார். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக மூர்த்தி யானை இறந்துவிட்டது’ என்றார்.
