

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பன்றிக் காய்ச்சலால் டாஸ்மாக் விற்பனையாளர் உயிரிழந்தார்.
மேட்டூரை அடுத்த கொளத்தூரைச் சேர்ந்தவர் அய்யாவு (50). அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அய்யாவு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 11-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் விமலா மற்றும் சுகாதாரத் துறையினர் அவரது வீடு அமைந்துள்ள கோரப்பள்ளம் பகுதியில் நேற்று முன்தினம் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மேலும், காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாமையும் நடத்தினர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த நபரின் குடும்பத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் மற்றும் அவருடன் பணியாற்றும் 4 பேர் என மொத்தம் 10 பேருக்கு ரத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாமிபுளு மாத்திரையும் வழங்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் காற்றில் பரவக்கூடியது. எனவே, சளி, காய்ச்சல் இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.