

நாகர்கோவில்: குமரி மாவட்டம் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் நேற்று தொடங்கினர்.
தூத்துக்குடி வி.இ.சாலையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா (27), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தசைகளை தளர்வடையச் செய்யும் ஊசி மருந்தை உடலில் செலுத்தி, கல்லூரி விடுதி அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், மயக்கவியல் பயிற்சி மருத்துவர்கள் ஹரிஷ், ப்ரீத்தி ஆகியோர் தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும், தன் மரணத்துக்கு இவர்கள் மூவரும் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற போலீஸார் முயற்சிப்பதாக புகார் தெரிவித்தும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, பேராசிரியர் பரமசிவம் உள்ளிட்ட 3 பேரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. அதன் பின்னரும் பேராசிரியர் பரமசிவம், கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்தார். இதுபொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி அருகே போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்தன. எனினும், போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தேசிய மருத்துவக் கவுன்சில், தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பேராசிரியர் பரமசிவம் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஹரிஷ், ப்ரீத்தி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையில், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இந்தவழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி அடங்கிய குழுவினர், வழக்கு விசாரணையை நேற்று தொடங்கினர்.
பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும், கல்லூரிநிர்வாகிகள், மாணவ, மாணவிகள், பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தவும், கல்லூரியில் ஏற்கெனவே நடைபெற்ற தற்கொலைகள் குறித்து விசாரிக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.