Published : 15 Oct 2023 07:38 AM
Last Updated : 15 Oct 2023 07:38 AM
நாகப்பட்டினம்/புதுடெல்லி: நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து, இருதரப்பு உறவை பலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு `செரியாபனி' என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மத்தியதுறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தலைமை வகித்தார். தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, நாகை எம்.பி. செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: இந்தியாவும், இலங்கையும் தூதரக மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்குகின்றன. நாகை மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து, இருதரப்பு உறவைபலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும்.
ஒரு காலத்தில் நாகையும், அதை ஒட்டியுள்ள நகரங்களும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுடன் கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தன. குறிப்பாக, வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் துறைமுகம், முக்கிய முனையமாக விளங்கியதாக தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. புதிய கப்பல் சேவை, இரு நாடுகளின் நகரங்களிடையே இணைப்பை ஏற்படுத்துவதுடன், வர்த்தகம், சுற்றுலா, இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளையும் மேம்படுத்தும். இருதரப்பு இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.
2015-ல் நான் இலங்கை சென்றபோது, டெல்லி மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், இலங்கையிலிருந்து உத்தர பிரதேசத்தின் ஆன்மிக நகரான குஷிநகருக்கு சர்வதேச விமான சேவை தொடங்கப்பட்டது. 2019-ல் சென்னை-யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. அந்த வகையில், இந்தியாவும், இலங்கையும் நிதித் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் யுபிஐ மற்றும் இலங்கையின் லங்கா பே ஆகியவற்றை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் குடியிருப்பு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா உதவும். கப்பல் சேவை வெற்றிகரமாகத் தொடங்க உறுதுணையாக இருந்தஇலங்கை அதிபருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றி.
தொடர்ந்து, ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இரு நாட்டு மக்களும் பயனடையும் வகையில், இருதரப்பு உறவை பலப்படுத்த இலங்கையுடன் இணைந்து செயல்பட இந்தியா உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
நாகையில் நடைபெற்ற விழாவில், மத்திய, மாநில அமைச்சர்கள் கொடியசைத்து, கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைத்தனர். அங்கு கூடியிருந்த மக்கள், ஆரவாரத்துடன் கையசைத்து கப்பலை வழியனுப்பி வைத்தனர்.
இதேபோல, இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், நாகைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். விழாவில், இலங்கை துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொண்டார். இந்த கப்பல் நேற்று மாலை நாகை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த கப்பலில் இலங்கையின் காங்கேசன்துறைக்குச் செல்லரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று 50 பேர் காங்கேசன்துறைக்குச் சென்றனர். விமான நிலைய நடைமுறைகள், கப்பல் பயணத்துக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT