

கோவை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று 3-வது நாளாக சோதனை மேற்கொண்டனர்.
சிக்கிம் மாநில லாட்டரிச் சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்றது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. 2019-ல் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக சம்பாதித்த ரூ.910 கோடியை, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக முதலீடு செய்திருப்பதைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் மார்ட்டின் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், பல கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர்.
இந்நிலையில், லாட்டரி அதிபர்மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள மார்ட்டின் வீடு, அருகே உள்ள கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று 3-வது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.