

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மத மோதலைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் பேசியவர்களைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனிப்பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னிமலை அருகேயுள்ள கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் செப். மாதம் 17-ம் தேதி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கிறிஸ்தவ மத போதகர் ஜான்பீட்டர் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் சென்னிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், ஜான் பீட்டரைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கிறிஸ்தவ முன்னணி சார்பில் கடந்த 25-ம் தேதி சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் மத மோதலைத் தூண்டும்வகையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சைக் கண்டித்தும், அவ்வாறு பேசியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்து முன்னணி சார்பில் சென்னிமலையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மொடக்குறிச்சி பாஜகஎம்எல்ஏ சரஸ்வதி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், இந்து முன்னணி மற்றும் சென்னிமலை வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதனிடையே, கிறிஸ்தவ முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர், சென்னிமலை போலீஸாரிடம் ஒரு கடிதம் வழங்கினர். அதில், "கத்தக்கொடிகாட்டில் ஜெபக் கூட்டம் நடத்தியவர்களை தாக்கியதற்கு எதிராக கடந்த 25-ம் தேதி சென்னிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, எங்களின் அனுமதியின்றி ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளார். இதை நாங்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி அவர்பேசியதற்காக, நாங்கள் வருத்தப்படுகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுகுறித்து தனிப்பிரிவு போலீஸார் தொடர்ந்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.