

கள்ளக்குறிச்சி: நெடுமானூர் ஊராட்சி மக்களின் வேண்டுகோளை ஏற்று, ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்களை மக்களுக்கே ஊராட்சி மன்றத்தலைவர் இலவசமாக வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த நெடுமானூர் ஊராட்சியில் பெரிய ஏரியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த ஊராட்சியைச் சேர்ந்த மக்கள், ஊர் ஏரியில் வளர்க்கப்படும் மீன்களை விற்பனை செய்யக்கூடாது.
மீன்களை வளர்த்து, ஏரி வற்றும் போது அவற்றை கிராம மக்களுக்கே வழங்க வேண்டும் என ஊராட்சித் தலைவர் பாக்கியம் நாகராஜனிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற ஊராட்சித் தலைவர், ஏரியில் தண்ணீர் வற்றத் தொடங்கிய நிலையில், நேற்று மீன்பிடி ஆட்களை கொண்டு மீன்களை பிடித்துள்ளார்.
அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்கள் சுமார் 3,500 கிலோவை எட்டியது. இந்நிலையில் அவற்றை ஊராட்சி மக்களுக்கே வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஊராட்சியில் உள்ள 1,300 குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2.5 கிலோ மீன் வீதம் இலவசமாக வழங்கலாம் என ஊராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து ஊர் மக்களை வரவழைத்து, அவர்களுக்கு தலா 2.5 கிலோ மீன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று நெடுமானூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒரே நாளில் மீன் குழம்பு வைத்து சமைத்து சாப்பிட்டனர். இதை தொடர்ந்து ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.