Published : 15 Oct 2023 04:08 AM
Last Updated : 15 Oct 2023 04:08 AM

“10 ஆண்டுகளில் சாதித்ததை பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா?” - சீமான் கேள்வி

வேலூரில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சாதித்ததை பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ‘‘தேர்தல் வரும் போது அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகிறார்கள். கடந்தாண்டு இந்த சோதனையை நடத்தி இருக்கலாம். நான்கு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. அதற்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

அமைச்சர் உதயநிதியை முதல்வர் பாராட்டியிருக்கிறார் என்பது அப்பா, மகனை பாராட்டாமல் எப்படி. என் பங்குக்கு அண்ணன் நானும் பாராட்டுகிறேன். நல்லா பண்ணுங்க தம்பி. பாஜக தலைவர் அண்ணாமலை தமிழன் தான். ஆனால், அவரே கர்நாடக மாநிலத்தில் நான் கன்னட மொழி பேசுவதற்கு மிகவும் பெருமை கொள்கிறேன் என கூறி உள்ளார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் நாட்டில் நடப்பதற்கு எதிர் மாறாக பேசி வருகிறார். விவசாய நிலங்களை அழித்து சாலை அமைக்கின்றனர். இதுபோன்ற விஷயங்கள் அவருக்கு தெரியவில்லை. யார் எப்படி போனாலும் நாட்டை அழிப்பதற்கு மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை கொண்டது. அந்த சித்தாந்தத்தை மாணவர்கள் படிப்பில் திணிக்கிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி, சாலை வரி, டோல்கேட் கட்டணம் போன்றவற்றால் மக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். இதையெல்லாம் சாதனை என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்கிறார்.

80 கோடி இந்திய ஏழை மக்களுக்கு கரோனா காலத்தில் இலவச அரிசி வழங்கினோம் என சொல்கிறது மத்திய அரசு. இதுதான் மிகப்பெரிய சாதனை. ஜிஎஸ்டியால் இந்த நாடு வளர்ந்தது எவ்வளவு? நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அமைச்சர் படித்ததுண்டா? வரி, வரி என்று மக்களை கொடுமைப் படுத்துகிறார்கள்.

ஊழலை ஒழிப்போம் என்று சொன்னார்கள். பிறகு எப்படி அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரச்சினையில் மாட்டிக் கொண்டவர்களை அழைத்து வர ஒரு வண்டி இல்லை. ரஷ்யா உக்ரைன் போரில் மாணவர்கள் சிக்கிக் கொண்டார்கள். அவர்களை அழைத்து வர சொந்தமாக ஒரு விமானம் கிடையாது.

10 ஆண்டுகளில் நாடு நாசமாக போய் விட்டது. 10 ஆண்டுகளில் சாதித்ததை பிரதமர் சொல்ல முடியுமா? ஸ்வைப் மெஷின் வைத்து பிச்சை எடுப்பது அல்ல வளர்ச்சி. பிச்சைக்காரர்கள் இல்லாமல் இருப்பது தான் வளர்ச்சி. அனைத்து பிரச்சினைகளுக்கும் நீதிமன்றம் என்றால் நாடாளுமன்றம் எதற்கு பல்லாங் குழி விளையாடவா?

வார்டு கவுன்சிலருக்கு வரிசையில் நின்று வாக்களிக்கிறோம். ஆனால், குடியரசுத் தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் குடியரசுத் தலைவரை தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். ஒற்றை கட்சி, ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவம் வேண்டும்.

காவிரியில் தண்ணீர் வாங்கித் தர முடியவில்லை. எப்படி மீண்டும் வந்து தமிழகத்தில் வாக்கு கேட்பீர்கள். மதுரையில் எய்ம்ஸ் அமைப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு செங்கலை வைத்து விட்டு போய் விட்டார்கள். விஜய்-ன் லியோ படத்துக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது வெளிப் படையாக தெரிகிறது.

ஆனால், ஜெயிலர் படத்துக்கு நெருக்கடி இல்லை. இதற்கு முன்பு விஜய் நடித்த மெர்சல், மாஸ்டர் படங்களுக்கும் நெருக்கடி இல்லை. சினிமாத் துறை என்பது தற்பொழுது கார்ப்பரேட் கையில் அடங்கியுள்ளது. ஆட்சியில் இருப்பவர்களே ஒரு கார்ப்பரேட்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x