

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்த மசோதாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை மீன்பிடி மற்றும் கடல் வளங்கள் சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இதன்மூலம், இழுவை மடிவலை தடை செய்யப்பட்டதுடன், அதை பயன்படுத்துவது குற்றமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அயல்நாட்டு மீன்பிடி படகுகள் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு, அதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா மூலம் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் படகுகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா கடந்த 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி கள் வெளியாகியுள்ளன. பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், மீன்பிடிபடகுகளை குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவால், இந்திய மீனவர்களை நீண்ட காலம் சிறை பிடிக்கவும், அவர்களிடம் இருந்து சில கோடிகள் வரை அபராதம் வசூலிக்கவும் முடியும். இது, மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய - இலங்கை அமைச்சர்கள் இரு முறையும் மீன்வளத் துறைகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் 3 முறையும் பேசியுள்ளனர். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், இப்படி ஒரு மசோதா கொண்டு வந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தற்போது மத்திய, மாநில அரசுகள் இணைந்து பாக் நீரிணை பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், இலங்கை அரசு இச்சட்டத்தை அமல்படுத்தினால், தமிழகத்தின் நடவடிக்கைகள், மத்திய அரசு எடுத்துவரும் தூத ரக ரீதியிலான முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமையும்.
பாக் நீரிணை பகுதி என்பது தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாகும். இந்த வரலாற்று உரிமையானது, கச்சத்தீவை தாரைவார்ப்பது தொடர்பாக கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தங்களால் அவர்களை விட்டுச் சென்றுவிட்டது. இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வது தொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மத்திய அரசு தூதரக நிலையில் தனது அதிருப்தியை தெரிவித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற இதுவே சரியான தருணமாகும்.
இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், ஜனவரி 25-ம் தேதி காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏற்கெனவே தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 163 படகுகளை இலங்கை கடற்படை இதுவரை விடுவிக்கவில்லை.
எனவே, தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கையில் உள்ள 108 மீனவர்கள், 165 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசின் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து, அந்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்பதை உறுதி செய்யும்படி வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.