

சென்னை: திமுக மகளிரணி சார்பில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பிரியங்கா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சென்னை வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் இன்று நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் சென்னை வருகின்றனர். இதை முன்னிட்டு நடைபெறும் ஏற்பாடுகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்பி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதற்கிடையில், நேற்று இரவு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் சென்னை வந்தனர். அவர்களை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் காங்கிரஸ் தமிழகத் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருவரும் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று மாலை 5 மணிக்கு ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் மாநாட்டுக்கு வருகின்றனர்.
முன்னதாக, இன்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி சார்பில் சோனியா, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவிடத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் செல்லவும் இருவரும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின் நாளை காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.
சோனியா, பிரியங்கா மற்றும் பல முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் சென்னை வருவதை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.