

கோவை/சென்னை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டனர்.
சிக்கிம் மாநில அரசின் லாட்டரிச்சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்றது தொடர்பாக மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2019-ல் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி வியாபாரத்தில் முறைகேடாக சம்பாதித்த ரூ.910 கோடியை, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக மார்ட்டின் முதலீடு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் மார்ட்டின் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை நடத்தியது. மேலும், பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
இதேபோல, கடந்த மே மாதம்மீண்டும் மார்ட்டின் தொடர்புடையஇடங்களில் சோதனை நடத்தி, ரூ.456.86 கோடி சொத்துகளை முடக்கினர். இந்நிலையில், அமலாக்கத் துறையினர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் சோதனையைத் தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அருகே உள்ள கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரத்தில் உள்ளஅவரது அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல, சென்னையில் மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுன்வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும், போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ளஆதவ் அர்ஜுனின் அடுக்குமாடிக் குடியிருப்பு, திருவல்லிக்கேணியில் உள்ள நிறுவனம் மற்றும் ஆயிரம்விளக்கு காதர் நவாஸ்கான் சாலையில் மார்ட்டின் தொடர்புடைய இடம் ஆகியவற்றிலும் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டனர்.
விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. இதில், முறைகேடாக சம்பாதித்த பணத்தை மார்ட்டின் வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.