Published : 14 Oct 2023 06:00 AM
Last Updated : 14 Oct 2023 06:00 AM

சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி: ரூ.15 கோடி நிதி வழங்கினார் அமைச்சர் உதயநிதி

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் - 2023போட்டிக்காக முதற்கட்டமாக ரூ.15 கோடி உரிமைத் தொகை மற்றும் செயல்பாட்டுத் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்திய மோட்டர் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் சிறப்பு நிகழ்வாக, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ). தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேசிங் புரோமோஷன்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில், சென்னையில் ‘சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்’ போட்டி நடத்தப்படவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக சாலைகள் வழியாக நடத்தப்படும் மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும்.

சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் - எஃப்-4 போட்டியில், இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகியவை சென்னைமாநகரில் தீவுத்திடல் மைதானத்திலிருந்து 3.5 கி.மீ சுற்றளவில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்க உள்ளனர்.

இப்போட்டியை நடத்த தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களான கே.ராஜேஷ் மற்றும் கே.கலைச்செல்வன் ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தலா ரூ.7.20 லட்சம்மதிப்பில் செயற்கை கால்களுக்கான உபகரணங்களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற WAKO உலகக் கோப்பை கிக்பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த எஸ்.பரத் விஷ்ணு, 5-ம் இடம் பெற்ற எம்.கோகுலகிருஷ்ணன் மற்றும் எஸ்.அஷ்வின் ஆகியோர் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x