Published : 14 Oct 2023 06:08 AM
Last Updated : 14 Oct 2023 06:08 AM

‘எமிஸ்’ பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது மகிழ்ச்சி: விளக்க கூட்டத்தில் டிட்டோ ஜாக் நிர்வாகிகள் தகவல்

சென்னை: எமிஸ் பணியில் இருந்து விலக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சென்னை டிபிஐ வளாகத்தில் அக்.13-ம் தேதி (நேற்று) போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.

இந்த நிலையில், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த 12-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப் பட்டது.

இதுதொடர்பான விளக்க கூட்டம் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடந்தது.இதில் டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட் பால்ராஜ், முத்துச்சாமி, சேகர் உட்படதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். பிறகு, செய்தியாளர்களிடம் டிட்டோ ஜாக் நிர்வாகிகள் தாஸ்,மயில் கூறும்போது, ‘‘எங்களது 30 கோரிக்கைகளில் 12 ஏற்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதிலும் குறிப்பாக, எமிஸ் உள்ளிட்ட ஆன்லைன் பதிவு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது மகிழ்ச்சியான தகவல். மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்’’ என்றனர்.

அரசு ஏற்ற கோரிக்கைகள்: பள்ளிக்கல்வித் துறை ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளின் விவரங்களை ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம்: இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது குறித்து மூவர் குழுவுக்கு பரிந்துரை செய்து தீர்வுகாணப்படும். எமிஸ் தளத்தில் வருகைப்பதிவு தவிர பிற அலுவல்சார்பதிவேற்ற பணிகளில் இருந்துஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார் கள். பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (எஸ்எம்சி) ஆண்டுக்கு 4 முறை கூட்டப்படும்.

உயர்கல்வி படித்த 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி ஆணை வழங்கப்படும். உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு பருவகாலஊதிய உயர்வு இல்லாமல் பணியாற்றும் 1,500 ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும். பி.லிட். முடித்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் அதன்பிறகு பி.எட். படித்ததால் வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுக்கான தணிக்கை தடைகள் நீக்கப்படும்.

58 மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் பள்ளி துணை ஆய்வாளர் பணி இடங்களை உருவாக்கி, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்குபணிமாறுதல் தரப்படும். 2019-ல்நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரூ.5,400 தர ஊதியம் பெற்றவர்களின் தணிக்கை தடை சரிசெய்யப்படும். பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி தேவை எனும் தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கு விரைந்து தீர்வு காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x