

சென்னை: புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள சுமார் 64 ஆயிரம் சதுரஅடிநிலம் போலி பத்திரம் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து அபகரிக்கப்பட்டதாகவும், இதில் பாஜக எம்எல்ஏ-க்களான ஜான்குமார் மற்றும் அவரது மகன் விவிலியன்ரிச்சர்டு ஜான்குமார் உள்ளிட்ட பலருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
போலி பத்திரங்களை ரத்து செய்து, கோயில் நிலத்தை மீட்கக்கோரி காமாட்சியம்மன் கோயில்தேவஸ்தான செயலர் சுப்ரமணியம்மற்றும் கோயில் பக்தரான வேல்முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘இந்த ஊழலில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் பொதுஊழியர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கபுதுச்சேரி சிபிசிஐடி போலீஸா ருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் மக்கள் பிரதிநிதிகளான தந்தையும், மகனுமான பாஜக எம்எல்ஏ-க்கள் இந்தகோயில் சொத்தை தங்களதுநேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் விதமாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட் டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பாஜகஎம்எல்ஏ ஜான்குமார் உள்ளிட்டோர் தரப்பில் அடைக்கலமேரி என்பவர்உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்குதலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
புதுச்சேரி அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ரவிக்குமார் ஆஜராகி,சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ளஇந்த நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கப்பட்டு, கோயில் தேவஸ்தானம் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறி, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சேவியர் பெலிக்ஸ் ஆஜராகி, இந்த நிலம் தொடர்பான சிவில் வழக்கு புதுச்சேரி கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும், என கோரினார்.
அதையடுத்து நீதிபதிகள், புதுச்சேரி அரசு தரப்பில் இந்த நிலம் மீட்கப்பட்டு கோயில் நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்பதை பதிவு செய்துகொண்டு, மனுதாரர்கள் தங்களுக்கான பரிகாரத்தை கீழமை நீதி மன்றத்தில் சட்டப்பூர்வமாக தேடிக்கொள்ளலாம், எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.