Published : 04 Jul 2014 11:13 AM
Last Updated : 04 Jul 2014 11:13 AM

அரசுப் பள்ளியை தத்தெடுத்தது ரோட்டரி- கால்வாயைக் கடக்க தனிப் பாலமும் அமைத்து உதவி

ஏழை, எளிய மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ள ரோட்டரி சங்கம், மாணவிகள் கால்வாயைக் கடந்து செல்ல தனியாக பாலமும் கட்டிக் கொடுத்துள்ளது.

மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உலகனேரியில் அமைந்துள்ளது. ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பிரித்து, மகளிருக்கென தனியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, 2006-ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தப்பட்டது. தற்போது 1,239 மாணவிகள் படித்து வரும் இந்தப் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்தது.

யா.கொடிக்குளம், மலையாளத்தான்பட்டி, மாங்குளம், மலையாண்டிபட்டி, அ.புதூர், நரசிங்கம், ஒத்தக்கடை, ராஜகம்பீரம், திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். ஆனால், இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு மேஜை, இருக்கை வசதி கிடையாது. அதேபோல பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதியும், கழிப்பறைகளில் சிலவும் சேதமடைந்த நிலையில் இருந்தன.

இதனிடையே, மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் இந்தப் பள்ளியைத் தத்தெடுத்து, ரூ.15 லட்சத்தில் பள்ளியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிக் கட்டிடத்தையும், 30 கழிப்பறைகளையும் சீரமைத்து புதிதாக வர்ணம் பூசியுள்ளனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 2 குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இருக்கை, மேஜைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். மேலும், பள்ளிக்கு வரும் வழியில் உள்ள கால்வாயை மாணவிகள் எளிதாகக் கடப்பதற்காக புதிய பாலத்தையும் கட்டிக் கொடுத்துள்ளனர்.

இவற்றை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை 11.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர், கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

அரசுப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ளன. ரோட்டரி சங்கத்தைப்போல மற்றவர்களும் அரசுப் பள்ளிகள் மீது கவனம் செலுத்தினால் ஏழை, எளிய மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.

ரோட்டரி கட்டிக் கொடுத்த பாலத்தில், கால்வாயைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவிகள். படம்: எஸ். ஜேம்ஸ்.

நெகிழ வைத்த மாணவி…

இந்தப் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மதுரை மேலூர் சாலையைக் கடக்க சிரமப்படுவதைக் கண்ட- அருகில் உள்ள அருணா அலாய் ஸ்டீல் நிறுவனத்தினர் தங்கள் செக்யூரிட்டிகளில் ஒருவரை மாணவிகள் சாலையைக் கடக்க உதவுவதற்காக நியமித்தனர். அவரது உதவியுடன் விபத்தின்றி பள்ளிக்குச் சென்ற மாணவிகளில் ஒருவர், பள்ளிப் படிப்பை முடித்த நாளில் கையில் மலர்களுடன் சென்று அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தார். நெகிழ்ந்து போன அந்த உரிமையாளர், தான் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதைப் பயன்படுத்தி பள்ளியை ரோட்டரி தத்தெடுக்க முயற்சி மேற்கொண்டார் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x