

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியின்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரை காளை முட்டியதில் அவர் பலியானார்.
இறந்தவர் ஜீவா என்ற குமார் என்றும் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் என்றும் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியில் இன்று (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்றது. அப்போது காளை ஒன்று சீறிப் பாய்ந்து வந்தது. காளைகள் வெளியேறும் இடத்தினருகே நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் பகுதிக்குள் காளை புகுந்தது. அப்போது ஜீவா என்ற குமார் மீது காளை முட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி எந்த சிக்கலும் இல்லாமல் தற்போது கோலாகலமாக தொடங்கி நடந்து வருகின்றது.
இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒருவர், சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஜல்லிக்கட்டில் இருவர், பாலக்குறிச்சி ஜல்லிக்கட்டில் ஒருவர் இன்று புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் ஒருவர் என மொத்தம் 6 பேர் காளைகள் முட்டி பலியாகினர்.