விவசாயிகள் இழப்பீடு கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் கடலூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்

விவசாயிகள் இழப்பீடு கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் கடலூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்
Updated on
1 min read

மதுரை: கொள்ளிடம் ஆற்றில் பாலம், தடுப்பணை, கதவணை கட்டுவதற்கு கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் கடலூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுவதற்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு 2013-ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம், தலையணை மதகு கட்டுமானப் பணிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து, கடலூர், தஞ்சை மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ், தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, மதகு, கதவணை உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களை வழங்கியவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளது என்றார். இதையடுத்து விசாரணையை நவம்பர் 10-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in