Published : 13 Oct 2023 04:52 AM
Last Updated : 13 Oct 2023 04:52 AM
சென்னை: கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான வழக்கில் லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பெங்களூரு நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படம் 2014-ல் வெளியானது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட்பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமிருந்து அப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் ரூ.10 கோடி கடன் பெற்றதாகவும், இதற்காக லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையுடன், தமிழகத்தில் வசூலாகும் தொகையில் 20 சதவீதத்தை ஆட்பீரோ நிறுவனத்துக்கு வழங்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கூறியபடி படவெளியீட்டு உரிமையை தங்களுக்கு வழங்காமல் வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், வாங்கிய கடன் தொகையையும் முழுமையாக திருப்பித்தரவில்லை எனக்கூறி ஆட்பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹார், இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2015-ல் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரு போலீஸார் லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 196, 199, 420, 463 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு உயர் நீதிமன்றம், 3 பிரிவுகளை மட்டும் ரத்து செய்தது. ஆனால் பிரிவு 463-ன் கீழ் ஆதாரங்களை திரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று லதா ரஜினி காந்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து லதா ரஜினிகாந்தும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அபிர்சந்த் நஹாரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், 'லதா ரஜினிகாந்த் ஒன்று கீழமை நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லையெனில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென அந்த நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்காக கீழமை நீதிமன்றம் ஆஜராக உத்தரவிட்டால் மட்டும் லதா ரஜினிகாந்த் ஆஜரானால் போதும். மற்ற நேரங்களில் ஆஜராகத் தேவையில்லை. இந்த வழக்கின் தகுதிகள் குறித்து நாங்கள் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே பெங்களூரு நீதிமன்றம் இந்த வழக்கை மெரிட் அடிப்படையில் விசாரிக்க வேண்டும். மேலும், இந்த பிரச்சினையை இருதரப்பும் சட்ட ரீதியாக மத்தியஸ்தம் மூலமாகவும் தீர்த்துக்கொள்ளலாம்’ என்றும் அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT