Published : 13 Oct 2023 06:01 AM
Last Updated : 13 Oct 2023 06:01 AM

சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் சென்னையில் ‘அமிர்த கலச யாத்திரை’ நிகழ்ச்சி: 5 மண்டலங்களில் மண் சேகரிப்பு

சென்னை: சென்னையில் நடந்த ‘அமிர்தகலச யாத்திரை’ நிகழ்ச்சியில், மாநகராட்சியின் 5 மண்டலங்களில் இருந்து மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில், ‘என் மண், என் தேசம்’ எனும்பிரச்சார இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தாய் நாட்டுக்காக உயர்ந்ததியாகம் செய்த துணிச்சல்மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரத்தின் ஒருபகுதியாக ‘அமிர்த கலச யாத்திரை’ கடந்த அக்.1-ம் தேதிமுதல் அக்.13-ம் தேதி வரை நாடுமுழுவதும் நடைபெற்றுவருகிறது.

இந்த யாத்திரையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7,500 கலசங்களில் மண் சேகரிக்கப்பட்டு, டெல்லியைச் சென்றடையும். அங்கு தேசிய போர் சின்னம் அருகே, இந்த மண் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பதன் அடையாளமாக ‘அமிர்தவாடிகா’ நிறுவப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சென்னை துறைமுகத்தின் மத்திய தொழில் பாதுகாப்பு படைப் பிரிவு சார்பில் ‘அமிர்த கலச யாத்திரை’ நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்புவிருந்தினராக முன்னாள் எம்எல்ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர் பங்கேற்றார். பள்ளியின் முதல்வர் கிருஷ்ணசாமி விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட மண், ஒரே கலசத்தில் சேகரிக்கப்பட்டன. இந்த கலசமானது ‘அமிர்த கலச யாத்திரை’ மூலமாக டெல்லியைச் சென்றடையும். தொடர்ந்துவிழாவில் அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த இந்தியாவை உறுதி செய்வதற்கான 5 தீர்மானங்களை மாணவர்கள் உறுதிமொழியாக எடுத்துக்கொண்டனர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எஸ்.வி.சேகர் பேசுகையில், ``இந்தியாவின் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் உலகநாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் பலம். கல்வியுடன் சேர்ந்த ஒழுக்கமே வாழ்வில் நம்மை உயர்த்தும்'' என்றார்.

இந்நிகழ்வில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தென் மண்டல டிஐஜி ஹர்ப்ரீத் கவுர், நேரு யுவ கேந்திரா சங்கதன் அமைப்பின் தமிழ்நாடு மாநில இயக்குநர் குன்ஹம்மது, எஸ்பிஐ தலைமை மேலாளர் (பாதுகாப்பு) சரிகா சவுகான், பூங்கா நகரத்தின் தலைமை மேலாளர் என்.வி.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகி இந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x