

சென்னை: பருவமழைக்கு முன்பாக இன்னும் ஒரு வாரக் காலத்துக்குள், சென்னைமாநகராட்சியின் கீழ் ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து சாலைப் பணிகளும் முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டு, சேவைத்துறைகளின் சார்பில் 2 மாத காலங்களுக்கு சாலை வெட்டுக்கள் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதியதாக சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளாமல், ஏற்கெனவே சாலை வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழக மின்வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பூந்தமல்லி பிரதான சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3,877 சாலைப் பணிகள் முடிவுற்றுள்ளன. தினந்தோறும் சராசரியாக 70 சாலைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பருவமழைக்கு முன்னதாக, இன்னும் ஒரு வாரக் காலத்துக்குள் ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து சாலைப்பணிகளும் முழுவதுமாக முடிக்கப்படும். மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ்குமார், சென்னைமாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.