

சென்னை: மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில், அறிவுசார்ந்த காப்புரிமை மையத்தை துணைவேந்தர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. 2 நாட்கள் நடைபெறும் இந்தகருத்தரங்கத்தின் தொடக்க விழாவுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் கே.நாராயணசாமி தலைமை தாங்கினார்.
சென்னை ஐஐடி முதல்வர் மனு சந்தானம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன், மத்திய அரசின் சென்னை காப்புரிமை மையத்தின் இணை கட்டுப்பாட்டு அலுவலர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கண்டுபிடிப்புகள்: இதில், மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிடும் வகையில், அறிவுசார்ந்த காப்புரிமை மையத்தை பல்கலை. துணைவேந்தர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் பெற்றிடும் வகையில், இப்பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக அறிவுசார்ந்த காப்புரிமை மையம் (ஐபிஆர்) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மாணவர்கள், மக்கள் நலம் மற்றும் நோய் தடுப்பு தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் அவை உரியமுறையில் காப்புரிமை பெறப்படுவதில்லை. இதனைக் கருத்தில்கொண்டு அறிவுசார்ந்த காப்புரிமை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை, இப்பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 700-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு அறிவுசார் காப்புரிமை, அதன் வகைகள் மற்றும் சட்டப்பூர்வமாக பதிவு செய்வது குறித்து மத்திய அரசின் காப்புரிமை மையத்தில் பணியாற்றும் 6 தொழில்நுட்ப வல்லுநர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.