Published : 13 Oct 2023 07:29 AM
Last Updated : 13 Oct 2023 07:29 AM

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத் துறை செயலர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 6 ஆயிரத்து 785 பேர்உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாமை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடிபேசியதாவது;

உலகிலேயே ஸ்பெயின்தான் உடல் உறுப்பு மாற்றுஅறுவை சிகிச்சையில் முன்னோடிநாடாக திகழ்கிறது. இந்தியாவில் தமிழகம் உடல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் ஸ்பெயினாக திகழ்கிறது. தமிழகத்தில் இதுவரை 36 ஆயிரத்து 472 நன்கொடையாளர்கள் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழிப்பத்திரம் அளித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 169 மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் சேகரிக்கப்பட்டு வெற்றிகரமாக மாற்று அறுவைசிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

விடியல் என்ற செயலி: விடியல் என்ற செயலி மூலமாக இந்த அறுவை சிகிச்சைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மட்டும் 128 நன்கொடையாளர்கள் மூலம் 733 பேர் பலன் அடைந்துள்ளனர். 53 பேருக்கு இதயமும், 84 பேருக்கு நுரையீரலும், 114 பேருக்கு கல்லீரலும், 228 பேருக்கு சிறுநீரகமும் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.

அரசு மரியாதை: தவிர தமிழகத்தில் 6 ஆயிரத்து 205 பேர் சிறுநீரகத்துக்காகவும், 443 பேர் கல்லீரலுக்காகவும், 75 பேர் இதயத்துக்காகவும், 62 பேர்நுரையீரலுக்காகவும் என மொத்தம்6 ஆயிரத்து 785 பேர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் விலைமதிப்பற்ற உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி அளித்தார். இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x