Published : 13 Oct 2023 04:06 AM
Last Updated : 13 Oct 2023 04:06 AM
புதுச்சேரி: பணியில் திருப்தி இல்லாததால் தான் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்த நிலையில், தனது துறை சார்ந்த பணிகளை விவரித்து 9 பக்க கடிதத்தை சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜி னாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பான கடிதங்களை 3 நாட்களுக்கு முன் அவர் ஆளுநர், முதல்வர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இது பற்றி சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, "முக்கியத் துறைகளை வைத்துள்ள சந்திர பிரியங்காவின் பணியில் திருப்தி இல்லை. அதனால், அவரை நீக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்தார். அந்த அதிருப்தியால்தான் அவர் நீக்கப்பட்டார். அவர் ராஜினாமா செய்யவில்லை.
பல அமைச்சர்கள் என்னை சந்தித்தது போல் இவர் என்னை சந்தித்தது இல்லை. முதல்வர் அவரை சொந்தப் பெண்ணாக பார்த்த நிலையில், சாதி ரீதியான பிரச்சினை இருப்பதாக அவர் கூறுவது வருத்தம் தருகிறது" என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த பதிலைத் தொடர்ந்து, சந்திர பிரியங்கா தான் இதுவரை செய்த பணிகளை துறைவாரியாக பட்டியலிட்டு, 9 பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: புதுச்சேரி அரசில் நான் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் (2021-23) எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள் சார்ந்து நான் மேற்கொண்ட பணிகளில் சிலவற்றை பொதுமக்களின் பார்வைக்கும், அமைச்சராக என் செயல் பாடுகள் குறித்து விமர்சனம் செய்து வருபவர்களின் கவனத்துக்கும் கொண்டு வர கடமைப் பட்டுள்ளேன்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் ஒய்-20 மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை, ‘புதுச்சேரி போக்குவரத்து அமைச் சர் சந்திர பிரியங்கா மிகச் சிறப் பாக செயல்பட்டு வருகிறார்’ என மேடையில் பாராட்டிப் பேசி சான்றளித்தார் என்பது இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கது.
மேலும், புதுச்சேரியில் உள்ள அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்படும் ஒரு துறைக்கு வழங்க உருவாக்கப்பட்ட ‘முதல்வர் விருது’ சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்ட துறை என தொழிலாளர் துறைக்குதரப்பட்டது. கடந்த சுதந்திர தினத்தில் முதல்வர் இவ்விருதை அளித்தார். இது சிறப்பான செயல் பாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைகிறேன்,
காரைக்கால் மாவட்டத்துக்கு இதுவரை இல்லாத வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான ஆதி திராவிடர் சிறப்புக் கூறு நிதி ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 - 23 நிதியாண்டில் ஆதிதிரா விடர் சிறப்புக்கூறு நிதி புதுச்சேரியில் 90 சதவீதம் செலவீனம் செய்யப்பட்டது. காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்ட 2022 - 23 ஆண்டுக் கான இதற்கான நிதியில் 98 சதவீ தம் செலவீனம் மேற்கொண்டு துறை சிறப்பான சாதனை செய்துள்ளது.
பல ஆண்டுகளாக ஆதிதிராவி டர் துறையில் திட்ட ஒப்புதலுக்கான கோப்புகள் புதுச்சேரி, காரைக்கால் என தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டு வந்தன. நான் பதவியேற்ற பின்னர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் இரு பிராந்தியங்களுக்கும் சேர்த்து ஒரே கோப்பில் பணிகள் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறும் வகை நடைமுறைப்படுத்தப்பட்டு நிர்வாகத் தாமதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டும் பிரத்தியேகமாக லைசென்ஸ் பெறும் வகையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ‘பிங்க் டே’ முறை அமல் படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான பெண்கள் லைசென்ஸ் பெற்றுள்ளனர். இரண்டு இ-ஆட்டோக்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு துறை வாயிலாக இலவச ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த பண முடிப்பு மற்றும் மாதாந்திர உதவித்தொகையுடன் கூடிய கலைமாமணி விருதுகள் 216 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த நேரு குழந்தைகள் விருது, கம்பன் புகழ் விருது, தொல்காப்பியர் இலக்கிய விருது ஆகிய விருதுகள் சமீபத்தில் 93 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன என்று தனது பணி தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் கருத்து மிகுந்த வேதனை அளிக்கிறது இந்த கடிதம் வெளியிட்டிருப்பது குறித்து சந்திர பிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “எனக்கு அளிக்கப்பட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டேன். அதற்கான சான்றுகளைத்தான் இந்தப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன்.
ஆளுநர் பேசிய கருத்து மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. ‘பதவி வேண்டாம்’ என ராஜினாமா செய்துவிட்டேன். ஆனாலும் ஏன் எல்லோரும் இது போல பேசி வருகின்றனர் என புரியவில்லை. மிகுந்த மனக்கஷ்டத்தில் இருப்பதால் தற்போது கருத்து எதுவும் கூற விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT