

பரபரப்பான புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்து பழைமையை தேடும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த புத்தகக் கண்காட்சியில், தமிழின் அரிய பொக்கிஷங்களை தேடிப் பதிப்பித்த உ.வே.சாமிநாதய்யர் பெயரிலேயே ஒரு புத்தக அங்காடி அமைந்துள்ளது.
கடை எண் 374 இங்கு எல்லோர் பார்வையிலும் படும்விதமாக உ.வே.சாவின் ''என் சரித்திரம்'' வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, காலத்தால் அழியாத படைப்புகளான பரிபாடல், புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களும் இந்த அங்காடியில் உள்ளன. ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், வித்துவான் தியாகராச செட்டியார் வரலாறுகள், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும், நினைவு மஞ்சரி, the story of udayana போன்ற நூல்களும் இடம்பெற்றுள்ளன.
உ.வே.சா நூலக அங்காடியைப் பற்றி விவரமாக அறிய கடையில் இருந்த 55 வயது மதிக்கத்தக்க வி.ராமஜெயம் என்பவரை அணுகினோம்..
''டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் பெசன்ட் நகரில் உள்ளது. அருண்டேல் கடற்கரைச் சாலை தி பெசன்ட் தியோசாபிகல் மேல்நிலைப்பள்ளி வாளகத்திற்குள் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் எல்லோருக்கும் கிடைக்காத 40 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
உ.வே.சாமிநாதய்யர் சேகரித்த ஓலைச்சுவடி, அவருடைய கையெழுத்துப் பிரதிகள், அவர் தேடிக் கண்டுபிடித்த கையெழுத்துப் பிரதிகள் இங்கு ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும்விதமாக வைக்கப்பட்டுள்ளன.
ருக்மணி அருண்டேல் உதவியுடன் இந்நூலகம் 1943ல் தொடங்கப்பட்டது. 70 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இன்று இந்நூலகத்தை 30பேர் கொண்ட அறிஞர்க்குழு ஒன்று வழிநடத்துகின்றது. இந் நூலகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் நூலகத்திற்கு வருகிறார்கள்.
இந்த நூலகத்தில் நான் 25 வருடங்களாக தோட்டக்காரரராகவும் தற்போது இரவுக் காவலராகவும் பணியாற்றி வருகிறேன். அறந்தாங்கி அருகிலுள்ளது என் கிராமம. அங்குதான் எனது குடும்பம் குழந்தைகள் எல்லாம்.
விஐடிவேந்தர் விஸ்வநாதன் இதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். உத்தராடம் என்பவர் நூலகப் புலவர் காப்பாட்சியராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
41வது சென்னை புத்தகக் கண்காட்சியைப் பொத்தவரை, எங்கள் அங்காடியில், உ.வே.சா.நூலக வெளியீடுகள் மட்டும் கிடைக்கும் வகையில் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், வாழ்க்கை வரலாறு, இலக்கணங்கள், உரைநடை நூல்கள், சிற்றிலக்கியங்கள், கதைப்பாடல், புராணங்கள் பிரிவுகளில் 55க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், கல்விசார்ந்தவர்கள் மட்டுமின்றி பழையன தேடிப் படிக்கவேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களும் இந்தக் கடைக்கு வருகிறார்கள். என்னால் மேலும் விவரமாக சொல்லமுடியாது. நூலகர் வருவார் அவரிடம் கேளுங்கள் இன்னும் விவரமாக சொல்வார்'' என்றார். ''இந்த அளவுக்கு போதும் சார் தேவைப்பட்டா லைப்ரரிக்கு வர்றோம்'' என்று விடைபெற்றோம்.
வேகமான உலகத்தில் கொஞ்சம் வித்தியாசமாக உணர நீங்களும் ஒரு விசிட் கொடுக்கலாமே உ.வே.சா நூலகத்திற்கு....