Published : 13 Jan 2018 09:41 PM
Last Updated : 13 Jan 2018 09:41 PM

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்ட நாதுராம் குஜராத்தில் கைது

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்ட கொள்ளையன் நாதுராம் குஜராத் மாநிலத்தில் ராஜஸ்தான் போலீஸாரால் வளைத்து பிடிக்கப்பட்டார்.

சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் எனபவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டு திருடப்பட்ட இந்த வழக்கில் 4 வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். நாதுராம் மற்றும் அவரது கூட்டாளி தினேஷ் சௌத்ரி ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றனர்.

இதில் நாதுராமுக்கு ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்கு உண்டு. அங்குள்ள உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த நாதுராமுக்கு கொள்ளை அடிப்பதே பிழைப்பு. அவர்கள் இருவரை பிடிக்கச் சென்ற தனிப்படையினர் நாதுராமின் தந்தை உறவினர்கள் உள்ளிட்டோரை பிடித்து வந்தனர். பின்னர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை நாதுராமையும் தினேஷ் சௌத்ரியையும் பிடிக்க ராஜஸ்தான் சென்றது.

அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார். அது இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு என்று பாலி மாவட்ட எஸ்பி உள்ளிடோர் சொன்னாலும், பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்த குண்டு இதுவரை கண்டு பிடிக்கப்படாததால் யார் பெரிய பாண்டியனை சுட்டது என்பதில் இதுவரை குழப்பம் நீடிக்கிறது.

இந்த வழக்கில் பெரிய பாண்டியனை நாதுராம் தான் சுட்டார் என முனிசேகர் புகார் அளித்திருந்தார். சுட்டுவிட்டு நாதுராமும் உடன் இருந்தவர்களும் தப்பிச் சென்றனர். இதுவரை நாதுராம் பிடிபடவில்லை. தினேஷ் சௌத்ரி பிடிபட்டார் அவர் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னைக்கு அவரை அழைத்துவரவில்லை.

தலைமறைவாக இருக்கும் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் போலீஸார், தமிழக போலீஸார் தனித்தனியே முயற்சி எடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்தவாரம்முகநூலில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் படத்தை நாதுராம் போட்டது பரபரப்பானது. நாதுராம் ஜாட் என்ற பெயரில் முகநூலில் கணக்கு வைத்துள்ள நாதுராம், தனது தொழிலாக கிரிமினல் செட்டில்மென்ட் என்று கட்டப்பஞ்சாயத்தையும் ஒரு தொழிலாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு ஆய்வாளரின் மரணத்திற்கு காரணமான கொள்ளையன் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற படத்தை தைரியமாக முகநூலில் பதிவு செய்து உலா வருகிறார். இது ராஜஸ்தான் போலீஸாருக்கும் தமிழக போலீஸ் அதிகாரிகள் மூலமாக முகநூல் பதிவு விவகாரம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நாதுராமை பிடிக்க வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர் மற்றும் தலைமை காவலர் அந்தஸ்த்தில் உள்ள திறமை வாய்ந்த போலீஸார் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் விரைந்தது. கொள்ளையன் நாதுராமை போலீஸார் ராஜஸ்தானில் தேடி வந்த நிலையில் நாதுராம் குஜராத்துக்கு தப்பிச்சென்றார்.

அங்கு தலைமறைவாக இருந்த நாதுராமின் நடமாட்டத்தை ராஜஸ்தான் போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து பாலி எஸ்பி தீபக் பார்கவ் தலைமையில்  குஜராத் விரைந்த ராஜஸ்தான் போலீஸார் குஜராத்தில் வைத்து நாதுராமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாதுராமை ராஜஸ்தான் அழைத்துச்சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

நாதுராமிடம் நடத்தப்படும் விசாரணையில் பெரிய பாண்டியனை சுட்டது யார் என்பது உட்பட பல விஷயங்கள் வெளிவரலாம். நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்றுள்ள தனிப்படை போலீஸார் டிரான்சிட் வாரண்ட் போட்டு தமிழகம் அழைத்து வருவார்களா? அல்லது தினேஷ் சௌத்ரி போல் ராஜஸ்தான் சிறையிலேயே நாதுராம் அடைக்கப்படுவாரா என்பது குறித்து தகவல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x