Published : 12 Oct 2023 02:58 PM
Last Updated : 12 Oct 2023 02:58 PM

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்புகளால் அடிக்கடி விபத்து @ வேலூர்

வேலூர் கொணவட்டம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள். | படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் பகுதியில் சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் வைத்துள்ளனர். இந்த தடுப்புகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்றும் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘‘சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. அப்படி இருக்கின்றபோது தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் காவல் துறையினர் இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். இது ஒரு பக்கம் பாதுகாப்பாக இருப்பதாக கூறினாலும், இரும்பு தடுப்புகளை கவனிக்காத வாகன ஓட்டிகள் அவ்வப்போது தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

உதாரணமாக, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிகம் இரும்பு தடுப்புகள் மீது மோதுவதை பார்க்க முடிகிறது. எதற்காக இரும்பு தடுப்புகள் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. விபத்துகளை ஏற்படுத்தும் இரும்பு தடுப்புகளை காவல் துறையினர் அகற்ற வேண்டும். அந்த இரும்பு தடுப்புகள் இரவு நேரத்தில் இருப்பதுகூட தெரிவதில்லை. அதுவும் விபத்து ஏற்பட காரணமாக இருக்கிறது’’ என்றார்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் மாவட்டத்தில் அதிகப்படியான சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களாக 36 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த இடங்களில் விபத்துகளை குறைக்க இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம், விரிஞ்சிபுரம் ஏரிக்கரை, கழினிப்பாக்கம், வெட்டுவானம் உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளால் அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்ல முடியும். மேற்குறிப்பிட்ட இடங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் இருந்து வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நுழையும் பகுதியாக இருப்பதால் இப்படி செய்யப்பட்டுள்ளது.

சாலையை சரியாக கவனிக்காமல் வாகனங்களை ஓட்டிவரும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இரும்பு தடுப்புகளில் ஒளிரும் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் அதிகளவில் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து இரும்பு தடுப்புகளில் இந்த பணி விரைவில் நடைபெறவுள்ளது. அதன் பிறகு சாலையில் இருக்கும் இரும்பு தடுப்புகள் மீது வாகனங்கள் மோதுவது குறையும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x