Published : 12 Oct 2023 05:35 AM
Last Updated : 12 Oct 2023 05:35 AM
சென்னை: எங்களை சட்டப்பேரவையில் பேசுவதற்கு விடுவதில்லை என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும் கோவை இன்னும் கூட மத அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளின் செயல்பாட்டில் இருக்கிறது என்றார்.
சட்டப்பேரவையில் இருந்து நேற்று பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுபற்றி பேரவை வளாகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவையில் முஸ்லிம் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக அக். 10-ம் தேதி கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றன. நோய் பாதிப்பு, வயது முதிர்வு, மாற்றுத்திறனாளி போன்ற கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினர். கோவையில் 1998-ம் ஆண்டு 11 இடங்களுக்கும் மேலாக குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 58 பேர் உயிரிழந்தனர். 200 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் கூட அந்த பாதிப்பில் இருக்கின்றனர். கொடூரமாக தவறு செய்தவர்களை இந்த அரசு தங்களுடைய வாக்குவங்கி அரசியலுக்காக இந்த நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என சட்டப்பேரவையில் வலியுறுத்துமாறு பாதிக்கப்பட்டவர்கள் எங்களை கேட்கின்றனர்.
கடந்த ஆண்டு கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு திட்டமிடப்பட்ட சதிச் செயல். அதனை திமுக அரசு, அது ஒரு விபத்து, சிலிண்டர் வெடிப்பு என்று கூறுகின்றனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என தேசிய புலனாய்வு துறையின் குற்றப்பத்திரிகை கூறுகிறது. கோவை இன்னும் கூட மத அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளின் செயல்பாட்டில் இருப்பதால், இம்மாதிரியான செயல்பாடுகள் எங்கள் பகுதியின் அமைதியை, பாதுகாப்பை பாதிக்கும்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பதிவு செய்ய கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தோம். நான் பேசும்போது வழக்கம்போல பேரவைத் தலைவர் மத்திய பிரதேசம், குஜராத் என சம்மந்தமே இல்லாமல் பதில் பேசுகிறார். அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் கூட, பேரவை தலைவர் பதில் சொல்கிறார். இன்றும் எங்களை முழுமையாக பேசவிடவில்லை. அதற்காக வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT