நிதி பரிவர்த்தனை அறிக்கையில் இடம்பெறும் தவறுக்கு உரிய விளக்கம் தராவிட்டால் அபராதம்: கூட்டுறவு வங்கி, சங்கங்களுக்கு வருமானவரித் துறை எச்சரிக்கை

நிதி பரிவர்த்தனை அறிக்கையில் இடம்பெறும் தவறுக்கு உரிய விளக்கம் தராவிட்டால் அபராதம்: கூட்டுறவு வங்கி, சங்கங்களுக்கு வருமானவரித் துறை எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தாக்கல் செய்யும் நிதி பரிவர்த்தனை அறிக்கையில் தவறுகள் இருக்கும்பட்சத்தில், அதற்கு உரிய விளக்கம்அளிக்கப்படவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித் துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித் துறை புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணை துறை சார்பில், கூட்டுறவு வங்கிகள்மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான‘மின்னணு சரிபார்ப்பு மற்றும் இணக்க மேலாண்மை’ என்றவிழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதனைதுறையின் இயக்குநர் ரவி பாபு தொடங்கி வைத்தார். கூடுதல் இயக்குநர் பவுன சுந்தரி, இணை இயக்குநர் பிரசாத், உதவி இயக்குநர் தாரணி, வருமானவரித் துறை அதிகாரிகள் சுப்ரமணி, ராஜாராமன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.

இதில் அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் மே 31-க்குள்கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் நிதிபரிவர்த்தனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக,படிவங்கள், 61-ஏ, 61-பி ஆகியவற்றை தவறு இல்லாமல் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் 3 ஆண்டுகள் வரித் தாக்கல் செய்யவில்லை எனில், வருமானவரி சட்டப் பிரிவு 80-பி கீழ், கிளெய்ம் பெற முடியாது. அத்துடன், வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும்.

தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் மின்னணு முறையிலான பரிசோதனையின்போது தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகள்,சங்கங்களுக்கு 3 முறை நோட்டீஸ்அனுப்பி விளக்கம் கோரப்படும். அவ்வாறு விளக்கம் அளிக்கப்படவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் சோதனை நடத்தப்படும். எனவே, நோட்டீஸ்களுக்கு குறித்த காலத்துக்குள் விளக்கம் அளிக்க வேண் டும்.

மேலும் நிதி பரிவர்த்தனை அறிக்கையில் தவறு ஏதேனும் நிகழ்ந்தால்அதைத் திருத்தி புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யலாம்.தமிழகத்தில் 5,500 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 531 சங்கங்கள் மின்னணு பரிவர்த்தனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in