Published : 12 Oct 2023 04:04 AM
Last Updated : 12 Oct 2023 04:04 AM

சந்திர பிரியங்கா ராஜினாமா ஏற்பு: புதிய அமைச்சராகிறார் திருமுருகன்?

திருமுருகன்

புதுச்சேரி: காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த சந்திர பிரியங்காவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட சூழலில், புதிய அமைச்சராக காரைக்காலைச் சேர்ந்த திருமுருகன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்.ஆர்.காங்கிரஸூக்கு முதல்வர் ரங்கசாமி உட்பட 4 அமைச்சர்களும், பாஜகவுக்கு 2 அமைச்சர்களும் உள்ளனர். இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ சந்திர பிரியங்கா போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

இவர் தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் தனித் தனியாக அனுப்பியிருந்தார். முதல்வர் இக்கடிதத்தை ஏற்று ஆளுநருக்கு அனுப்பினார். ஆளுநரும் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அடுத்த அமைச்சர் யார் என்ற கேள்வி எழத் தொடங்கியது. காரைக்கால் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏவும், புதுச்சேரியிலுள்ள இரு எம்எல்ஏக்கள் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக பேச்சு எழுந்தது. இது பற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, “கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசையை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். அப்போதே தனது அமைச்சரவையை மாற்றுவதற்கு கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.

இதில் சந்திர பிரியங்காவுக்கு பதிலாக காரைக்கால் தெற்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ திருமுருகனை அமைச்சராக்க பரிந்துரை செய்துள்ளார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் புதிய அமைச்சரை நியமிக்க மத்திய உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

இதற்காக துணை நிலை ஆளுநர் தமிழிசை, மத்திய உள்துறைக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். திருமுருகன் அமைச்சராவதற்கு மத்திய உள்துறையிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டனர்.

இது பற்றி என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “புதுவை மாநிலம் புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களாக உள்ளன. இதில் மாஹே, ஏனாமில் தலா ஒரு எம்எல்ஏ உள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் என்.ஆர்.காங்கிரஸூக்கு காரைக்கால் தெற்கு தொகுதியில் திருமுருகனும், நெடுங்காடு தனி தொகுதியில் சந்திர பிரியங்காவும் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

காரைக்கால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இன்னும் 6 மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் காரைக்கால் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழும்.

இதனால் காரைக்காலுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அமைச்சரவையில் பட்டியலின பிரதிநிதித்துவம் தொடர்கிறது. ஊசுடு தனி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சாய் சரவணன்குமார் குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சராக உள்ளார்” என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x