Published : 16 Jan 2018 08:29 PM
Last Updated : 16 Jan 2018 08:29 PM

பிறமொழி மோகத்தில் தமிழை தவிர்க்கும் தமிழர்கள்: முதல்வர் பழனிசாமி வேதனை

தமிழகத்தில் பிறந்து இங்கேயே வாழும் சிலர் பிற மொழி மோகத்தில் தமிழை தவிர்ப்பது வேதனை அளிப்பதாக தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில், திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை நடந்தது. இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்று, இந்தாண்டுக்கான திருவள்ளுவர் விருதை கோ.பெரியண்ணனுக்கும் மற்றும் கடந்தாண்டுக்கான பெரியார் விருது - பா.வளர்மதி, அம்பேத்கர் விருது- ஜார்ஜ். கே.ஜே.,. அண்ணா விருது- அ.சுப்பிரமணியன், காமராஜர் விருது- தா.ரா.தினகரன், பாரதியார் விருது- திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர் சு.பாலசுப்பிரமணியன் (எ)பாரதிபாலன், பாரதிதாசன் விருது- கே.ஜீவபாரதி, திரு.வி.க.விருது- எழுத்தாளர் வை.பாலகுமாரன், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- ப.மருதநாயகம் ஆகியோருக்கு வழங்கினார். இது தவிர, வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவிக்கான அரசாணைகளையும் அவர் வழங்கினார்.

விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

''தமிழ் மொழி தமிழருக்கு அடையாளம் என்றால், திருக்குறள் தமிழருக்கு முகமாக இருக்கிறது.தமிழை நேசித்தால் பிறந்த நாட்டையும், வணங்கும் தெய்வங்களையும், ஈன்ற பெற்றோரையும் நேசிப்பதற்கும், வணங்குவதற்கும் சமம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் என்பது தமிழர்களின் அறிவு, பண்பாடு, வீரம், நாகரிகம், பழக்கவழக்கம் ஆகிய ஐந்தும் கலந்த ஒரு சுவைமிகு கூட்டுக் கலவை. அதை நாம் பஞ்சாமிருதமாக சுவைக்கலாம் என்று தமிழர் பண்டிகைகள் உலகிற்கு பறைசாற்றுகின்றன.

மனிதர்கள் நம் செவியோடு பேசுகிறார்கள். நண்பர்கள் நம் உணர்வுகளோடு பேசுகிறார்கள். இறைவன் நம் ஆன்மாவோடு பேசுகிறார்

புத்தகங்கள் மட்டும்தான் நம் மனதோடு பேசுகின்றன என்பார்கள். எந்த நூல்கள் மனிதர்களின் மனதோடு பேசி அவர்களுக்குள்ளே தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றனவோ, அவைதான் உலகத்தில் தலை சிறந்த நூல்களாக, படைப்புகளாக மதிக்கப்டுகின்றன, போற்றப்படுகின்றன. அவற்றையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு நூல் போற்றி வணங்கப்படுகிறது என்றால் அது திருக்குறள் மட்டும்தான். உலகில் உள்ள அத்தனை மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.

இன்றைக்கு சுமார் 40 நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள், அந்தந்த நாடுகளில் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன.

வெளிநாட்டினரும் தமிழ் அறியா பிற மாநிலத்தவர் மற்றும் பிற நாட்டினர் தமிழ் பேசுகிறார்கள்,

தமிழ் எழுதுகிறார்கள். ஆனால், தமிழ் நாட்டிலேயே பிறந்து , தமிழ் நாட்டிலேயே வாழும் சிலர் பிற மொழி மோகத்தில் தமிழை தவிர்ப்பது, வேதனை அளிக்கிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ்மொழி தேசியமொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது பொருள்தேடி கடல் கடந்து சென்று குடியேறிய நாடுகளிலும் தமிழர் என்ற தன் அடையாளத்தை, தன் பண்பாட்டை, மறக்காமல் இருக்கும் தமிழர்களின் மொழியுணர்வே அதற்குக் காரணம்.

இந்தியாவிலேயே முதன்முதலில் அச்சுக்கு வந்த மொழி தமிழ் என்பதைப்போலவே, முதன்முதலில் கணினிக்குள் புகுந்த

மொழியும் தமிழ்தான். இன்று இணையதளம் தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவம் கொண்டு சேர்க்கிறது. தமிழ் விக்கிபீடியா வலை தளத்தை ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் படிக்கின்றனர். இணையம் வழியாக தமிழ் பரவ நம் இளைஞர்கள் தான் காரணம். இதற்காக அவர்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவள்ளுவர், கம்பர், அவ்வையார், இளங்கோவடிகள், ஒட்டக்கூத்தர், காளமேகப்புலவர், பாரதியார், பாரதிதாசன் போன்ற பல தமிழ் புலவர்களை நாம் இன்னமும் நம்முடைய இதயத்தில் வைத்து போற்றி வருகிறோம். தமிழ்தான் அவர்களுக்கு சாகாவரம் கொடுத்தது. அதனால்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 'தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பதையே, தாரக மந்திரமாக ஏற்று, உலகில் அதிக மக்கள் பேசும் சீனம், அரபு, கொரிய மொழிகளில் திருக்குறள், ஆத்தி சூடி, பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை மொழிபெயர்க்கச் செய்து வெளியிட்டார். இன்றைக்கு தமிழ்மொழி நீதி நூல் படைப்புகளாக உலகம் முழுவதும் பரவி தமிழுக்கு மகுடம் சூட்டியிருப்பதற்கு முழுமுதற்காரணம் ஜெயலலிதாதான்.

கீதை, பைபிள், குரான் போன்ற நூல்கள் உலகத்தின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், எந்த மதத்தையும் சாராத திருக்குறள்தான். சுமார் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல். திருக்குறளை சுமார் 140 பேர் மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் மட்டும் சுமார் 50 பேர் மொழி பெயர்த்திருக்கிறார்கள். காரணம், உலக சமயத் தலைவர்கள், உலக சான்றோர்கள், அறிஞர்கள் கூறுகின்ற அத்தனை கருத்துகளும், நீதிகளும் - ஒரே நூலில் கருத்துக் குவியலாக, நீதி களஞ்சியமாக இருக்கின்றன என்றால் அது திருக்குறளில் மட்டும்தான்.

தமிழ்தாய்க்கு அணிகலன்களாக சிலப்பதிகாரமும், சிந்தாமணியும், குண்டலகேசியும், வளையாபதியும் இன்னும் பல காப்பியங்களும் நீதி நூல்களும் அழகு சேர்த்தாலும், தன் கையில் திருக்குறளை செங்கோலாக வைத்துக் கொண்டுதான் தமிழ்த்தாய் உலகையே ஆட்சி செய்கிறாள்.

நூலை வடிப்பதைவிட நூலை படிப்பதை விட ஒரு நூலாக வாழ்வதே சிறந்தது. திருக்குறளில் கூறப்பட்டுள்ள குறள்களில் உள்ள

கருத்துகள்படி, நாம் வாழ வேண்டும். அப்போதுதான் இந்தப் பிறவியும், வாழ்வும் நிறைவு பெறும்.

நம் தாய்மொழி தமிழ் சுமார் 5000 ஆண்டுகால வரலாறு உடையது. தொல்காப்பியர் காலத்திலிருந்து, இன்று வரை தமிழின் தனித்தன்மையை, வழிவழியாக காத்து வருபவர்கள், நமது தமிழ் புலவர்களும், சான்றோர் பெருமக்களும் ஆவார்கள்.

ராஜ சபைக்கு வந்து, மன்னனின் புகழைப்பாடி பரிசு பெறுகிற புலவன் கூட, கையேந்திப் பரிசு பெற்றதில்லை. பரிசுத் தட்டுக்கும் மேல்தான் புலவனின் கை இருக்குமே தவிர, கீழே இருந்ததில்லை அப்படி தன்மானமும், ஞானமும் மிக்கவர்களாக புலவர்கள் இருந்தார்கள், வாழ்ந்தார்கள்'' என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x