Published : 11 Oct 2023 05:50 AM
Last Updated : 11 Oct 2023 05:50 AM

முற்றுகை போராட்டம் நடத்திய 700 செவிலியர்கள் கைது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

பணி நிரந்தரம், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆர்பி செவிலியர்களை போலீஸார் நேற்று வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.படங்கள்: ம.பிரபு

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய 700 செவிலியர்களை போலீஸார் கைது செய்தனர்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல, எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பல்வேறு கட்டங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டிஎம்எஸ் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டம் நடத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் நேற்று அதிகாலை வந்தனர். ஆனால் அவர்களை வளாகத்துக்குள் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தடுத்து நிறுத்திய போலீஸாரையும் தாண்டி டிஎம்எஸ் வளாகத்துக்குள் செவிலியர்கள் புகுந்து, தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, காலை 11 மணிக்கு சங்கத்தின் நிர்வாகிகளை அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த செவிலியர்களைக் கைது செய்வதற்காக ஏராளமான பெண் போலீஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

ஆனால், செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகோத்து கொண்டதால், அவர்களை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. இதனால் போலீஸாருக்கும், செவிலியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் செவிலியர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதில் சிலர் மயக்கம் போட்டு விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் கைது செய்யப்பட்ட 700 செவிலியர்களை போலீஸார் வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றி, சென்னையில் 4 இடங்களில் பிரித்து திருமண மண்டபம், சமூக நலக்கூடத்தில் தங்கவைத்தனர். அங்கும் செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே செவிலியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

பாஜக தலைவர் அண்ணாமலை: நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய செவிலியர்களை காவல்துறையை ஏவி, சமூக விரோதிகளைப் போல திமுக அரசு கைது செய்திருக்கிறது. செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்களை காவல்துறை கொண்டு ஒடுக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: செவிலியர்களைக் காவல்துறை கைது செய்திருக்கும் போக்கு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த விதத்திலும் உதவாது. தமிழக அரசு உடனடியாக செவிலியர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் செவிலியர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x