

சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் இன்று (அக். 11) இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும்,கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93.2 முதல் 95 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 78.8 முதல் 80.6 டிகிரி பாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
அக்.10-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் 11 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் தலா 9 செ.மீ., சேலத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.