Published : 11 Oct 2023 05:55 AM
Last Updated : 11 Oct 2023 05:55 AM

வருங்காலத்தில் பட்டாசு விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவிப்பு

சென்னை: ஓசூர், அரியலூர் பகுதிகளில் நடந்தபட்டாசு விபத்துகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீது நடந்த விவாதம்:

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கடந்த 7-ம் தேதி நடந்த பட்டாசு விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். அரியலூர்மாவட்டம் திருமானூர் அருகே கடந்த9-ம் தேதி நடந்த பட்டாசு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற விபத்துகள் இனியும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): இப்போது மட்டுமல்ல. 2011-21 காலகட்டத்திலும்இதுபோல பல பட்டாசு விபத்துகள் நடந்துள்ளன.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விருதுநகர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களை தொடர்ந்து தற்போது ஒசூர்,அரியலூரில் விபத்து நடந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம்.

அருள் (பாமக): கடந்த ஒரு மாதத்தில் 3 இடங்களில் விபத்துகள் நடந்து, பலர் உயிரிழந்துள்ளனர்.இதற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் போதாது. ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: பெரும்பாலும் உரிய பயிற்சி பெறாதவர்களே பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். அரியலூர் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்ததில், 7 பேர் மட்டுமே விருதுநகரை சேர்ந்தவர்கள். பயிற்சி பெற்றஇவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து பட்டாசு தயாரித்துள்ளனர்.

ஒரே நாள் ரெய்டு நடத்தி இதுபோன்ற ஆலைகளை மூடிவிடலாம். ஆனால், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவேதான், பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

தொழிலாளர் நலத் துறை அமைச்சருடன் பேசி, தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த அதிமுகஆட்சியில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போது தலா ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x